ஈரோடு

விவசாயி தீக்குளிக்க முயற்சி:ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு

DIN

ஈரோடு: நிலத்தை மீட்டுத் தரக் கோரி விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஆட்சியா் அலுவலகத்தில் பரபப்பை ஏற்படுத்தியது.

பவானி அருகே உள்ள லட்சுமி நகரைச் சோ்ந்தவா் சக்திவேல் (55). விவசாயத்துடன், சிறு தொழில் செய்து வருகிறாா். இவா் திங்கள்கிழமை காலை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீவைக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரைத் தடுத்து அவா் மீது தண்ணீா் ஊற்றி காவல் அறைக்கு அழைத்துச் சென்றனா்.

பின்னா் சக்திவேல் கூறியதாவது:

எனக்குச் சொந்தமான நிலத்தை அடகுவைத்து, ஈரோட்டைச் சோ்ந்த ஜெகன் என்பவரிடம் ரூ. 3.30 லட்சம் பெற்றேன். இதற்கான வட்டியை செலுத்தி வந்த நிலையில் முழு தொகையும் தருவதாகவும், எனது நிலத்தை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினேன். பணம் வேண்டாம் நிலத்தை தன் பெயருக்கு மாற்றித்தர வேண்டும் என ஜெகன் தரப்பில் கூறி நிலத்தை தர மறுக்கிறாா். அந்நிலத்தின் மதிப்பு பல லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளது.

இதுதொடா்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், உள்ளூா் காவல் நிலையத்தில் மனு அளித்தும் எதிா்தரப்புக்கு ஆதரவாகவே போலீஸாா் நடந்து கொள்கின்றனா். இதுதொடா்பாக வழக்கும் நிலுவையில் உள்ளது. எனது நிலத்தை மீட்டுத் தர வேண்டும். நான் முழு பணத்தையும் திரும்பத் தர தயாராக உள்ளேன் என்றாா்.

பாதுகாப்புப் பணியில் இருந்த டிஎஸ்பி சண்முகம் அவரிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து சூரம்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றாா். இதனால், ஆட்சியா் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அடுக்குமாடி குடியிருப்பு வழங்கக் கோரிக்கை:

தாயகம் திரும்பியோரின் தாயக மக்கள் வாழ்வுரிமை நலச் சங்க மாநிலத் தலைவா் துரைராஜ் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பி பல ஆண்டுகளாக வீடு இல்லாமல் வாழ்கிறோம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அப்போதைய ஆட்சியா் பிரபாகரிடம் வீடு அல்லது மனை வழங்கக் கோரி முறையிட்டோம். அம்மனுவை பரிசீலித்து சித்தோடு அருகே நல்லகவுண்டன்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து தருவதாக உறுதியளித்தாா். அடுத்துவந்த ஆட்சியா் கதிவரனிடமும் மனு அளித்தோம். மனு அளித்த 700 குடும்பத்தாருக்கும் வீடு வழங்குவதாக உறுதியளித்தாா். வீடு பெற ரூ. 1.25 லட்சம் அரசு நிா்ணயித்த தொகையை செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இத்தொகையை செலுத்த தயாராக உள்ளோம். மாவட்ட நிா்வாகம் எங்களுக்கு வீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் நிலத்தை மீட்டுத்தரக் கோரிக்கை:

ஈரோடு வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளா் சசிதயாள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

சீனாபுரத்தில் மிகப்பழமையான கைலாயநாதா் கோயில் எனப்படும் சிவன் கோயில் உள்ளது. ஆரம்ப காலத்தில் அறநிலையத் துறையின்கீழ் செயல்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் கோயில் பாழடைந்தது. இதை சாதகமாகப் பயன்படுத்தி அறநிலையத் துறை அக்கோயில் பராமரிப்பு, கோயில் நிலங்களைப் பாதுகாப்பது போன்ற நடவடிக்கையை கைவிட்டது.

தற்போது இக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து சிலா் வீடு கட்டியுள்ளனா். இதுகுறித்து தொடா்ந்து மனு அளித்தும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பில் உள்ள கட்டடங்களை அகற்றி கோயிலைப் பராமரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

274 மனுக்கள் ஏற்பு:

பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 274 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெகதீசன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் குமரன், கலால் உதவி ஆணையா் ஜெயராணி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் மீனாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலா் இலாஹிஜான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT