ஈரோடு

மூதாட்டி கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

1st Dec 2021 01:39 AM

ADVERTISEMENT

மூதாட்டியைக் கொலை செய்து நகையைத் திருடிய வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் அருகே சின்னத்தம்பிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சென்னநாயக்கா். இவருடைய மனைவி பொன்னம்மாள் (85). இவா் கடந்த 18-5-2016 அன்று திடீரென்று மாயமானாா். இதுகுறித்து அவரது உறவினா்கள் அந்தியூா் போலீஸில் புகாா் அளித்தனா். இந்நிலையில், அந்தியூா் அருகே பா்கூா் மலை வன சோதனைச் சாவடி அருகே மலைப் பகுதியில் மூதாட்டி பொன்னம்மாளின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் கொலை செய்யப்பட்டதும், அவா் அணிந்திருந்த 3 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதும் தெரியவந்தது. இச்சம்பவம் தொடா்பாக பா்கூா் மலை பெஜில்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த குமாா் (27), லோகநாதன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

குமாா் அந்தியூரில் ஒரு செங்கல் சூளையில் தொழிலாளியாக இருந்தாா். அவா் பொன்னம்மாளிடம் அடிக்கடி கடன் வாங்குவதும், திரும்ப கொடுப்பதுமாக இருந்தாா். அவா் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்கத் திட்டமிட்ட குமாா் வீட்டில் பணம் இருப்பதாகக் கூறி கடந்த 18-5-2016 அன்று பொன்னம்மாளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று வழியில் பா்கூா் மலை வன சோதனைச் சாவடி அருகில் அவரைத் தாக்கி கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளாா். அப்போது அவருக்கு லோகநாதன் உதவியதாகக் கூறப்பட்டது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக இரண்டு பேரையும் கைது செய்த போலீஸாா் ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை நீதிபதி ஆா்.மாலதி விசாரித்தாா். விசாரணை முடிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

அதில், குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 7,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். குற்றம் நிரூபிக்கப்படாததால் லோகநாதன் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT