ஈரோடு

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயில் தேரோட்டம்: எம்.எல்.ஏ.க்கள் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்

27th Sep 2020 06:44 PM

ADVERTISEMENT

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயில் தேரோட்டத்தை எம்எல்ஏக்கள் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோயிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா புரட்டாசி மாதம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 20-ந்தேதி இரவு 7 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 21-ந்தேதி இரவு 7 மணிக்கு அன்ன பறவை வாகனத்தில் பெருமாள் காட்சி அளித்தார். இதையொட்டி விழா தொடங்கி நிறைவடையும் வரை தினமும் காலை 6 மணிக்கு யாகசாலை பூஜையும், திருமஞ்சனமும் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.

22-ந்தேதி இரவு 7 மணிக்கு சிம்ம வாகனத்திலும், 23-ந்தேதி இரவு 7 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 24-ந்தேதி இரவு 7 மணிக்கு கருடசேவை வாகனத்திலும், 25-ந்தேதி இரவு 7 மணிக்கு யானை வாகனத்திலும் கஸ்தூரி அரங்கநாதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று  மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் கஸ்தூரி அரங்கநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதன்பின்னர் இரவு 8 மணிக்கு மலர் பல்லக்கில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. 

ADVERTISEMENT

முன்னதாக காலை 7 மணிக்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தேரில் ஸ்ரீதேவி -பூதேவியுடன் பெருமாளின் உற்சவ சிலை வைக்கப்பட்டது. பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, கே.வி.ராமலிங்கம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி கோஷங்கள் எழுப்பினார்கள். கொரோனா வைரஸ் காரணமாக தேரை இழுத்து செல்ல 100 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. 

சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு தேர் இழுத்துச்செல்லப்பட்டது. வழக்கமாக கோயில் முன்பு இருந்து வடம் பிடிக்கப்பட்ட தேர் ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா வந்து பெரியமாரியம்மன் கோவில் முன்பு நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் மாலையில் பிரப்ரோடு, காமராஜர் வீதி வழியாக சென்று மீண்டும் கோவில் முன்பு நிலை நிறுத்தப்படும். ஆனால் இன்று தேர் எங்கும் நிறுத்தப்படாமல் இழுத்து செல்லப்பட்டது. நாளை (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.  

செவ்வாய்க்கி-ழமை இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.  புதன்கிழமை காலை 6 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. அன்று இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.

Tags : Erode
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT