ஈரோடு

42-வது ஆண்டில் பெரியார் மாவட்டம்

கே.விஜயபாஸ்கா்

ஈரோடு: மஞ்சள், ஜவுளி மாவட்டம் என போற்றப்படும் ஈரோடு மாவட்டம் இன்று 42ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ஈரோடு நகரைத் தலைமையிடமாகக் கொண்டு பெரியார் மாவட்டமாக 1979 செப்டம்பர் 17 ஆம் தேதி 13ஆவது மாவட்டமாக உருவானது. ஈரோடு, கோபி என இரண்டு வருவாய் கோட்டங்கள், 10 வருவாய் வட்டங்கள், 14 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது. ஈரோடு மாவட்டம் என 1996இல் பெயர் மாற்றப்பட்டது. தமிழகத்தில், பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டமான ஈரோடு 2009இல் திருப்பூர் மாவட்டம் உருவானபோது, காங்கயம், தாராபுரம் வட்டங்களை விட்டுக்கொடுத்தது.
 அதன் பிறகும் 8,161 சதுர கி.மீ. உடன் மிகப் பெரிய மாவட்டமாக நீடிக்கிறது. மாவட்டத்தில் 2 லட்சத்து, 28 ஆயிரத்து, 750 ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதி உள்ளது. இது மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 27.7 சதவீதமாகும். மாவட்டத்தில், பவானி, நொய்யல், காவிரி என மூன்று ஆறுகள் பாய்கின்றன. கடந்த 1955இல் கட்டப்பட்ட பவானிசாகர் அணை, விவசாயம் மற்றும் குடிநீருக்கு ஆதாரமாகத் திகழ்கிறது. ஈரோடு நகராட்சி 2008 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஈரோடு மாவட்டம், மஞ்சள் உற்பத்தி, ஐவுளி வர்த்தகம், விசைத்தறி என பல துறைகளில் முன்னணியில் உள்ளது. அதேபோல் எண்ணற்ற கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன.

வரலாற்று அடையாளங்கள்:
 ஈரோடு மாவட்டம், எண்ணற்ற வரலாற்று அடையாளங்களைக் கொண்டது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கொமுடி மகுடேஸ்வரர் கோயில், 1,500 ஆண்டு பழமையானது. விஜயமங்கலத்தில், சமண மன்னன் கொங்கு வேளிரால் கட்டப்பட்ட, 1,800 ஆண்டுகள் பழமையான சமணர் கோவில் உள்ளது. கந்தர் சஷ்டி கவசம் இயற்றப்பட்ட சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில், பண்ணாரி மாரியம்மன், பவானி, கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் உள்ளிட்ட 450-க்கும் மேற்பட்ட பாடல்பெற்ற ஸ்தலங்களைக் கொண்டது ஈரோடு மாவட்டம். சின்ன கோடம்பாக்கம் என அழைக்கப்பட்ட கோபி, இயற்கை எழில் கொஞ்சும் தாளவாடி மலைப் பகுதிகளையும் கொண்டது. பவானி, நொய்யல் ஆறுகளை இணைக்கும் காளிங்கராயன் வாய்க்கால், இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட முதல் நதிநீர் இணைப்புத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமைப்படுத்திய ஆளுமைகள்:
 பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாமனிதர்களை, ஈரோடு மாவட்டம் ஈன்றெடுத்துள்ளது. தீரன் சின்னமலை, கொடிகாத்த குமரன், கீழ்பவானி பாசனத் திட்டம் உருவாக காரணமாக இருந்த ஈஸ்வரன் என 350-க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், பெரியார், கணிதமேதை ராமானுஜம், புலவர் ராசு, கவிஞர் ஈரோடு தமிழன்பன், தமிழ் சினிமாவில் முதன்முதலில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற நடிகை கே.பி.சுந்தராம்பாள், திரைப்பட நடிகர் பாக்கியராஜ், நடிகை தேவயானி புகுந்த வீடு, அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலர், மாவட்டத்தின் பெருமையை பறைசாற்றி வருகின்றனர்.

தொழில்கள்கள்:
 ஈரோடு நகரில் மஞ்சள் மற்றும் ஜவுளி வர்த்தகம், பவானியில் ஜமக்காளம், கவுந்தப்பாடியில் நாட்டுச் சர்க்கரை, சென்னிமலையில் போர்வை மற்றும் படுக்கை விரிப்பு, பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகள், பேப்பர் தொழிற்சாலைகள், பின்னலாடை நிறுவனங்கள், சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள், மசாலா மற்றும் பால் உற்பத்தி நிறுவனங்கள், நவீன அரிசி ஆலைகள், எண்ணெய் ஆலைகள் என தொழில்களுக்குப் பஞ்சம் இல்லாதது.
இதன் காரணமாகவே, தமிழகம் மட்டுமல்லாது, வடமாநிலங்களில் இருந்தும், தினந்தோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், வேலை தேடி வருகின்றனர். மாவட்டத்தில் தங்கியுள்ள வெளி மாவட்ட, வெளி மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்தை தாண்டும். 

சவால்கள்: 
ஈரோடு மாவட்டத்தின் பெருமைகளுக்கு இணையாக குறைகளும் ஏராளமாக உள்ளது. பெருகி வரும் எண்ணற்ற தொழிற்சாலைகளால், மாவட்டத்தின் சுற்றுச்சூழல், பாதித்துள்ளது. பவானி முதல் ஈரோடு வரை அமைந்துள்ள சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலை கழிவுகள், காவிரி ஆற்றில் கலந்து மாசு ஏற்படுத்துகிறது.
 சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள சாயப்பட்டறை, காகித ஆலைக் கழிவுகளால், பவானி ஆறு, மிகத் தீவிரமாக பாதித்துள்ளது. சென்னிமலையில் உள்ள ஒரத்துப்பாளையம் அணை, சாயக்கழிவுகளால் நிரம்பி வழிகிறது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் 2,800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெருந்துறை சிப்காட்டில், மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும், 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. 
கிராபைட், கிரானைட் உள்ளிட்ட பல்வேறு வகையான கனிம வளங்கள் நிறைந்த மாவட்டத்தில், கட்டுக்கடங்காத கனிமவளக் கொள்ளையால், சூழலியல் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலை நச்சுப் புகையால், சுவாசக்கோளாறு, மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் ஆலைக் கழிவுகளால், தோல் வியாதிகள், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.
 சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், புற்றுநோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கையில், ஈரோடு மாவட்டம், தமிழகத்தில் முதலிடம் வகிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சாதனைகள்:
 மாவட்டம் தொடங்கப்பட்டு 41 ஆண்டுகளில் பெருந்துறையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டது. மஞ்சளுக்கு புவிசார் குறியீடு, சத்தியமங்கலம், ஆசனூர் வனக் கோட்டங்களை இணைத்து புலிகள் காப்பகம் ஏற்படுத்தியது, மஞ்சளுக்கு புவிசார் குறியீடு போன்றவற்றை குறிப்பிடலாம்.

மேம்படுத்தப்படாத கட்டமைப்புகள்: 
ஈரோடு மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசல் மிக தீவிரமான பிரச்னையாக உள்ளது. கடந்த 41 ஆண்டுகளில் ஈரோடு நகரில் ஒரே ஒரு மேம்பாலம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. புகர் பேருந்து நிலையங்கள், ஜவுளி சார்ந்த தொழில் மையங்கள் இடமாற்றம் போன்ற கோரிக்கைகள் மாவட்ட தலைநகரமாக மாறிய காலத்தில் இருந்தே ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
 தென் மாவட்டங்களுக்கு செல்லும் பிரதான சாலையான ஈரோடு-கரூர் சாலை 100 ஆண்டுகளுக்கும் மேலாக மேம்படுத்தப்படாதது மிகப்பெரிய குறையாக உள்ளது. ஈரோடு மாநகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் முடிவடையாமல் இழுத்துக் கொண்டிருக்கும் புதை சாக்கடை திட்டம், கோபி, பவானி, சத்தியமங்கலம், புஞ்சைப்புளியம்பட்டி ஆகிய நகராட்சிப் பகுதிகள், 42 பேரூராட்சிப் பகுதிகளில் சாலை, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் பல ஆண்டுளாக மேம்படுத்தப்படவில்லை.

 விவசாயம், தொழில், மலை வளம் என அனைத்திலும் சிறப்புற்று விளங்கும் ஈரோடு மாவட்டம், வளர்ச்சி என்ற பெயரில் இதில் ஒன்றைக்கூட இழந்துவிடக்கூடாது. இதற்கான திட்டங்கள், கட்டமைப்புகளை அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும்: ராமதாஸ்

ஒரே நேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர குரல் கொடுப்பேன்: தங்க தமிழ்செல்வன்

SCROLL FOR NEXT