ஈரோடு

தமிழகத்தில் பெரியார் வழியில் திராவிட இயக்கம் வேரூன்றி நிற்கிறது: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

17th Sep 2020 12:06 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் பெரியார் வழியில் திராவிட இயக்கம் இன்றும் வேரூன்றி நிலைத்து நிற்கிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். 

பெரியாரின் 142 ஆவது பிறந்தநாள் விழா ஈரோட்டில் இன்று அரசு சார்பில் நடைபெற்றது. பெரியார்-அண்ணா நினைவகத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வியாழக்கிழமை காலை  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ.1.25  கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி, வங்கிக் கடனுதவிகளை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கினார்.       

இதன்பிறகு அவர்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது பெரியாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதன் பிறகு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பெரியார் கல்லூரிக்கு கட்சியின் சார்பில் நிதி உதவி வழங்கியதோடு பெரியார் நினைவை போற்றும் வகையில் அரசின் சார்பில் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களுக்கு பெரியார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. இதுபோல் தமிழகத்தில் ஒவ்வொரு தலைவரும் பெரியாரை போற்றி புகழ்ந்து வருகின்றனர். 

திராவிட இயக்கத்தின் வரலாற்றில் அனைவரும் சமநிலை அடைய வேண்டும் என்பதற்காக பணியாற்றிவர் பெரியார். பெரியார், அண்ணா ஆகியோரின் வழியில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி புரிந்தனர். ஜெயலலிதாவின் வழியில் தற்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார். ஒரு நாடு எப்படி சீர்திருத்தத்தை உருவாக்க வேண்டும் என்பதற்கு  பெரியார் உதாரணமாக விளங்கினார். தமிழகத்தில் 1967-க்கு பிறகு திராவிட இயக்கம் வேரூன்றி இன்றும் நிலைத்து நிற்பதற்கு பெரியாரின் வழிகாட்டுதல் தான் காரணம்.

ADVERTISEMENT

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் நீதிமன்ற வழிகாட்டுதலின் படி நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு மன அழுத்தம் இருப்பதாக பெற்றோர்கள், மாணவர்கள் கூறியதையடுத்து வரும் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் என்றைக்கும் இருமொழிக்கொள்கை தான் தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். கூடுதல் பள்ளிக் கட்டணம் வசூலிப்பதாக இதுவரை 14 பள்ளிகள் மீது புகார் வந்துள்ளது. 

இதுதொடர்பாக விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு அறிவிக்கை வழங்கப்பட்டுள்ளது. இன்றைய பொருளாதார சூழலில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்குவது என்பது சாத்தியமில்லை. தமிழகத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் மனநிலை மற்றும் கரோனா பரவல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

Tags : Erode
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT