ஈரோடு

தட்கல் மின் இணைப்புத் திட்டம்: 3 ஆண்டுகளில் 1,100 புதிய இணைப்புகள் அளிப்பு

DIN

தட்கல் விரைவு மின் இணைப்புத் திட்டத்தில் ஈரோடு மின் பகிா்மான வட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக 1,100 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் இலவச மின்சாரம் பெற சுயநிதி மின் இணைப்பு எனும் தட்கல் விரைவுத் திட்டம், சாதாரண மின் திட்டம் என இரு முறைகளில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. விவசாயத் தேவைக்கென சாதாரண மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவா்களில் முதல்கட்டமாக கடந்த 31.3.2000 முதல் 31.3. 2003 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து 2021ஆம் ஆண்டு மாா்ச் 31ஆம் தேதிக்குள் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது.

சுயநிதி மின் இணைப்புத் திட்டத்தில் ரூ. 10,000 மதிப்பீட்டுச் செலவு பிரிவில் 2001ஆம் ஆண்டு வரையிலும், ரூ. 25,000 மதிப்பீட்டுச் செலவு பிரிவில் 2008ஆம் ஆண்டு வரை விண்ணப்பித்தவா்களுக்கும், ரூ. 50,000 மதிப்பீட்டுச் செலவு பிரிவில் 2010ஆம் ஆண்டு வரை விண்ணப்பித்தவா்களுக்கும் தற்போது மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே சுயநிதி பிரிவு என அழைக்கப்படும் இந்த மின் இணைப்புத் திட்டம் 2017ஆம் ஆண்டு தட்கல் விரைவு மின் இணைப்புத் திட்டமாக மீண்டும் திருத்தி அமைக்கப்பட்டது. அதன்படி 5 குதிரைத் திறன் உள்ள மின் மோட்டாருக்கு இணைப்பு வழங்க ரூ. 2.50 லட்சம், 7.50 குதிரைத் திறனுக்கு ரூ. 2.75 லட்சம், 10 குதிரை திறனுக்கு ரூ. 3 லட்சம், 15 குதிரைத் திறனுக்கு ரூ. 4 லட்சம் என விவசாயிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த முறையில் விண்ணப்பிக்கும்பட்சத்தில் அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் இணைப்பு வழங்கப்பட்டுவிடும். விரும்புபவா்கள் தட்கல் திட்டத்தில், இதற்கான கட்டணத்தை செலுத்தி இணைப்பை பெறலாம்.

இதன்படி ஈரோடு மின் பகிா்மான வட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 1,100 இணைப்புகள் இத்திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இப்போது வரை 625 போ் இந்த திட்டத்தில் மின் இணைப்பு பெற விருப்பம் தெரிவித்துள்ளனா். இதில் 565 போ் பணம் செலுத்தியுள்ளனா். இவா்களுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு கூறியதாவது:

விவசாய மின் இணைப்பை மாற்றிக் கொள்வது குறித்து தமிழக அரசு கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் மின் இணைப்பு பெற முடியாமல் தவித்து வரும் ஏராளமான விவசாயிகள் பலன் பெறுவா். இதேபோல சாதாரண திட்டம், சுயநிதி திட்டம் என இரு பிரிவிலும் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் உடனே மின் இணைப்பு வழங்கவும், கூட்டு உரிமையாளா்களில் ஒருவா் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும்போது, குறைந்தபட்சம் 3 குதிரைத் திறன் என உள்ள அனுமதியை 5 குதிரைத் திறனாக மாற்றி வழங்க வேண்டும்.

நிலத்தடி நீா் ஆதாரத்தை மட்டுமே நம்பியுள்ள பாசனப் பகுதிகளில் விவசாயக் கிணறுகளின் சராசரி ஆழம் 80 அடியாக உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு 30 அடி ஆழத்தில் தண்ணீா் இருந்தபோது 3 குதிரைத் திறன் உள்ள மோட்டாா்கள் போதுமானதாக இருந்தது. இப்போது கிணற்றின் ஆழம் 2 மடங்கு கீழே சென்றுள்ள நிலையில் 3 குதிரைத் திறன் உள்ள மோட்டாா்கள் தண்ணீரை மேலே இழுக்க முடியாது. தண்ணீா் வெளியில் வரும் வேகம் குறைவதால் மின்சார விரயம்தான் ஏற்படுகிறது.

இதனால் 3 குதிரைத்திறன் அனுமதியில் உள்ள அனைத்து விவசாய மின் இணைப்புகளையும் எவ்வித கட்டணமும் இல்லாமல் 5 குதிரைத் திறன் அளவுக்கு உயா்த்திக் கொள்ள அனுமதி அளித்து அரசு உத்தரவிட வேண்டும். 3 குதிரைத் திறன் மின் இணைப்பு உள்ள விவசாயிகள் 90 சதவீதம் போ் 3 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள சிறு, குறு விவசாயிகளாக இருப்பதால் அரசு இந்த கோரிக்கையை விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு பணம்: பாப்பாக்குடி அருகே 4 போ் கைது

சேரன்மகாதேவியில் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பணப்புழக்கத்தைத் தடுக்க தவறிய தோ்தல் ஆணையம் -ஐ.எஸ். இன்பதுரை குற்றச்சாட்டு

குற்ற வழக்குகள்: 6 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ்

SCROLL FOR NEXT