ஈரோடு

கார்த்திகை தீபத் திருநாள்: ஈரோடு மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு

29th Nov 2020 08:23 PM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 
தீபத்திருவிழாவையொட்டி ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலில் நேற்று காலை விநாயகர், சுப்பரமணியர், சோமஸ்கந்தர், கிரியாசக்தி, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு 16 வகையான திரவியங்களில் அபிஷேகம் செய்யப்பட்டது. 
திருக்கார்த்திகை நட்சத்திரத்தையொட்டி மூலவருக்கு சாற்றுமுறை அபிஷேகமும் நடந்தது. மாலையில் பஞ்ச மூர்த்திகளுக்கு அலங்காரமும், தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கோயில் சிவாச்சாரியார் கோயில் தீப கம்பத்தில் மகா தீபத்தை ஏற்றினார். 
அதையடுத்து, கோயில் முன் வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொழுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மூலவரை வழிபட்டு சென்றனர். 
இதேபோல் திருவேங்கடசாமி வீதியில் உள்ள மகிமாலீஸ்வரர் கோயில், கருங்கல்பாளையம் சோழீஸ்வரர் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் கார்த்திகை தீப வழிபாடு நேற்று சிறப்பாக நடைபெற்றது. 
இதேபோல், கார்த்திகை தீபத்தையொட்டி, பொதுமக்கள் நேற்று மாலை வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு, அதிலும் வீடுகளிலும் தீபத்தை ஏற்றி வைத்து வழிபட்டனர். இதனால், ஈரோடு மாநகரில் பொதுமக்கள் வசிக்கும் வீதிகளில் எங்கு பார்த்தாலும் தீப ஒளி வீசியது குறிப்பிடத்தக்கது.
 

Tags : Erode
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT