ஈரோடு

சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

28th Nov 2020 05:05 PM

ADVERTISEMENT

சத்தியமங்கலம் நகர்ப் பகுதியில் உள்ள கோட்டுவீராம்பாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சவுடம்மன் கோயில் வீதியில் சுப்பிரமணியம் மற்றும் மாரப்பன் ஆகியோருக்கு சொந்தமான காலியிடத்தில் தனியார் நிறுவனத்தின் சார்பில் செல்போன் கோபுரம் அமைப்பதற்காக பொக்லைன் இயந்திரம் அப்பகுதியில் கொண்டுவரப்பட்டு குழி தோண்டுவதற்காக ஆயத்த பணிகள் நடைபெற்றது.
குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க முயற்சிப்பதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான காவலர்கள் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு தனியார் நிறுவனம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர். இதைக் கேட்ட பொதுமக்கள் ஆத்திரம் அடைந்ததோடு குடியிருப்புப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக் கூடாது குடியிருப்புப் பகுதியை விட்டு தள்ளி வேறு எங்கு வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளுங்கள் எனக்கூறியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து செல்போன் டவர் அமைக்கும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது. 
இதைத்தொடர்ந்து குழி தோண்டுவதற்காக வந்த பொக்லைன் இயந்திரம் திரும்பிச் சென்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
முன்னறிவிப்பின்றி செல்போன் கோபுரம் அமைப்பதாக பொதுமக்கள் தெரிவித்ததால் இது குறித்து தகவல் தெரிவித்ததாகவும் தற்போதைக்கு பணி கைவிடப்பட்டு 2 நாள்கள் மட்டும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் பின் மீண்டும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கும் என தனியார் நிறுவனம் மற்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்கும் பணியைத் தொடங்கினால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Erode
ADVERTISEMENT
ADVERTISEMENT