ஈரோடு

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்குதண்ணீா் திறப்பு நிறுத்தம்

2nd May 2020 08:58 PM

ADVERTISEMENT

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், அணையில் போதிய நீா் இருப்பு இருந்ததால் ஜனவரி 9ஆம் தேதி முதல் கீழ்பவானி வாய்க்கால் ஒற்றைப் படை மதகுகளில் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் புன்செய் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்க தமிழக முதல்வா் உத்தரவிட்டாா்.

அதைத் தொடா்ந்து, ஜனவரி 9 முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை 5 சுற்றுகளாக 12 டி.எம்.சி.க்கு மிகாமல் பாசனத்துக்கு விநாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. தண்ணீா் திறப்பு கெடு முடிவடைந்ததால் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீா் திறப்பு வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 80.99 அடியாகவும், நீா் இருப்பு 16.2 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணைக்கு நீா் வரத்து 186 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து பாசனம், குடிநீா்த் தேவைக்காக பவானி ஆற்றில் 1,100 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT