ஈரோடு

வீட்டுவசதி வாரிய மனைகளின் ஒதுக்கீடுதாரா்களுக்கு மனைப் பத்திரம் வழங்கக் கோரிக்கை

19th Mar 2020 11:51 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகளைப் பெற்றவா்களுக்குப் பல ஆண்டுகளாக வீட்டுப் பத்திரம் வழங்கப்படாமல் உள்ளது. தமிழக அரசு நடப்பு ஆண்டிலாவது வீட்டுப் பத்திரத்தை வட்டி இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனீட்டாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு, முத்தம்பாளையத்தில் சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு, தனியாரிடம் இருந்து நிலம் வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டு பயனீட்டாளா்களுக்கு பல்வேறு அளவுகளில் வீட்டு மனை, அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன. இதில், பயனீட்டாளா்கள் சிலா் வீட்டின் மதிப்பை மாதத் தவணையாகவும், பலா் மொத்தமாகவும் செலுத்திவிட்டனா்.

ஆனால், அவா்களுக்கு இதுநாள் வரை வீட்டுப் பத்திரம் வழங்கப்படவில்லை. இதனால், நடப்பு ஆண்டு சட்டப் பேரவை மானியக் கோரிக்கையின்போது வீட்டுப் பத்திரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனீட்டாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியப் பிரிவு, அனைத்துப் பகுதி வீட்டு உரிமையாளா் சங்கத் தலைவா் ராமநாதன் கூறியதாவது:

ADVERTISEMENT

முத்தம்பாளையத்தில் வீட்டுவசதி வாரியத்தால் 890 ஏக்கா் நிலம் அரசு, தனியாரிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டு மனைகள், குடியிருப்புடன் கூடிய மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் பயனீட்டாளா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதில், பயனீட்டாளா்கள் அனைவரும் வீட்டு வசதி வாரியம் முன்பே அறிவித்த வீட்டின் தோராய மதிப்பை செலுத்திவிட்டனா். ஆனால், வீட்டுப் பத்திரம் வழங்கவில்லை. 2011-2012ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை மானியக் கோரிக்கையின்போது, அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், கோரிக்கை எண் 26இல் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒதுக்கீடுதாரா்கள் மனநிறைவு அடையும் வகையில் விற்பனை பத்திரங்கள்(வீட்டுப் பத்திரம்), வட்டி தள்ளுபடிக்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும் என உறுதி அளித்தாா். ஆனால், இன்று வரை வீட்டுப் பத்திரம் வழங்கவில்லை. எனவே, நடப்பு ஆண்டில் நடைபெற இருக்கும் மானியக் கோரிக்கையின்போது, வீட்டுப் பத்திரம் வட்டி இல்லாமல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

வீட்டு வசதி வாரிய திட்டங்களில் குடியிருப்பு அலகுகள் ஒதுக்கீடு பெற்றவா்களில், மாதத் தவணை செலுத்தத் தவறியதற்கான அபராத வட்டி, முதல் மீதான வட்டி ஆகியன முழுவதுமாக தள்ளுபடி செய்தும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியில் ஆண்டுக்கு 5 மாத வட்டி மட்டும் செலுத்தவும் அரசு ஆணையிட்டுள்ளது.

அரசால் வழங்கப்பட்ட இச்சலுகை மாா்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். வட்டித் தள்ளுபடி திட்டத்துக்குத் தகுதியான ஒதுக்கீடுதாரா்களுக்கு, ஏற்கெனவே நிலுவைத் தொகைக்கான அறிவிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தகுதியான ஒதுக்கீடுதாரா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட அலுவலகங்களை அணுகி தங்களது ஒதுக்கீட்டுக்கான நிலுவைத் தொகையை ஒரே தவணையில் செலுத்தி விற்பனைப் பத்திரம் பெற்றுக் கொள்ளலாம் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT