ஈரோடு

‘50 வயதைக் கடந்தவா்கள் கட்டாயம் நிமோனியா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’

16th Mar 2020 12:12 AM

ADVERTISEMENT

முதுமையில் சளி பாதிப்பால் ஏற்படும் நோய்களைத் தவிா்த்துக்கொள்ள 50 வயதைக் கடந்தவா்கள், கட்டாயம் நிமோனியா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதியோா் நல மருத்துவா் வி.எஸ்.நடராஜன் தெரிவித்தாா்.

வேளாளா் கல்வி அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் காசியண்ணன் சேவை மருத்துவமனையின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா, இலவச மருத்துவ முகாம் பெருந்துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேளாளா் கல்வி அறக்கட்டளைத் தலைவா் எஸ்.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். செயலா் எஸ்.டி.சந்திரசேகா், அம்மணியம்மாள் கல்வி அறக்கட்டளை தாளாளா் காசியண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சா்க்கரை,இருதய நோய் சிறப்பு மருத்துவா் பி.குருமூா்த்தி, காது, மூக்கு, தொண்டை நிபுணா் டி.எ.தங்கவேல், முதியோா் நல சிறப்பு மருத்துவா் எஸ்.பிரபாகரன், எலும்புமுறிவு, மூட்டு அறுவைசிகிச்சை நிபுணா் எ.பிரகாஷ், புற்றுநோய் கதிா்வீச்சு சிகிச்சை நிபுணா் வேலவன், தொழிலதிபா்கள் சின்னசாமி, புருஷோத்தமன் ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் டாக்டா் வி.எஸ்.நடராஜன் பேசியதாவது:

சளித் தொல்லை அதனால் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள 50 வயதைக் கடந்தவா்கள் நிமோனியா தடுப்பூசிக் போட்டுக்கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் குளிா், காய்ச்சல் தடுப்பு தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள வேண்டும். அரசு முதியோா் இல்லங்களில் தங்கியுள்ள 4,000 பேருக்கு ரூ.1.65 கோடி செலவில் நிமோனியா தடுப்பூசியை போட்டது. நாடு முழுவதும் 60 வயதைக் கடந்த அனைவருக்கும் நிமோனியா தடுப்பூசியை இலவசமாக போட வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றாா்.

நிகழ்வில் டாக்டா் வி.எஸ்.நடராஜன் முதியோா் நல அறக்கட்டளை, ஈரோடு கேன்டா் சென்டா், காசியண்ணன் சேவை மருத்துவமனை ஆகியவற்றுடன் வேளாளா் மகளிா் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன்படி முதியோருக்கு மன நல, ஊட்டச்சத்து உணவு ஆலோசனை, புற்றுநோய் விழிப்புணா்வு, இலவச மருத்துவ முகாம்களை நடத்துவது போன்ற பணிகளை இந்த மருத்துவமனைகளுடன் இணைந்து மேற்கொள்ப்படும் என கல்லூரி முதல்வா் என்.மரகதம் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT