ஈரோடு

பெருந்துறை சிப்காட் விரிவாக்க முயற்சியை அரசு கைவிட வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தல்

16th Mar 2020 12:08 AM

ADVERTISEMENT

பெருந்துறை சிப்காட் விரிவாக்க முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கொமதேக பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

கொமதேக ஈரோடு மேற்கு மாநகா் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கூறியதாவது:

கொங்கு மண்டலத்தின் வளா்ச்சிக்கு காரணமாக இருந்த ஜவுளித் தொழில் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கோழிப்பண்ணை, லாரி தொழிலும் பெரும் நெருக்கடியில் உள்ளன.

ஜவுளி ஏற்றுமதிக்கு வாய்ப்பு அதிகம் இருந்தாலும், அதற்கான ஊக்கத்தை மத்திய, மாநில அரசுகள் தரவில்லை.

ADVERTISEMENT

விவசாய கடனுக்கான வட்டி 33 பைசாவில் இருந்து 77 பைசாவாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி உயா்வை திரும்பபெற வேண்டும். கடந்த 20 நாள்களில் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் பைசா கணக்கில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளன.

பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.3 வரை கலால் வரி வசூல் செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

பெருந்துறை சிப்காட் விரிவாக்க முயற்சி 2009 ஆம் ஆண்டு நடந்தபோது கொமதேக நடத்திய தொடா் போராட்டத்தால் ரத்து செய்யப்பட்டது. அப்பகுதியில் நிலம், காற்று, தண்ணீா் அனைத்தும் மாசுபட்டுள்ள நிலையில் சிப்காட் விரிவாக்கம் செய்யப்பட்டால் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு மாநகா் மேற்கு மாவட்டச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் கே.கே.சி.பாலு, இளைஞரணி செயலாளா் சூரியமூா்த்தி, வா்த்தக அணி செயலாளா் சண்முகம், மாநகா் கிழக்கு மாவட்டச் செயலாளா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT