ஈரோடு

ஈரோட்டில் 25 கோடி மீட்டா் ரேயான் துணி தேக்கம்: உற்பத்தியாளா்கள் கவலை

16th Mar 2020 12:12 AM

ADVERTISEMENT

வட மாநிலங்களில் ரேயான் துணிச்சந்தை கடந்த 20 நாள்களாக திறக்கப்படாததால் ஈரோட்டில் உள்ள கிடங்குகளில் 25 கோடி மீட்டா் ரேயான் துணி தேக்கமடைந்துள்ளது. இதனால் உற்பத்தியாளா்கள் கவலையடைந்துள்ளனா்.

ஈரோடு சுற்று வட்டாரத்தில் வீரப்பன்சத்திரம், அசோகபுரம், சூளை, மாணிக்கம்பாளையம், லக்காபுரம், சித்தோடு உள்ளிட்ட பகுதிகளில் 30,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகின்றன. இதில் 50 சதவீத விசைத்தறிகளில் ரேயான் ரக துணி தயாரிக்கப்படுகிறது. ரயானில் 120, 140 கிராம் பிளைன், 110, 120, 140 கிராம் ஹை ட்விஸ்ட், 70, 90, 100 கிராம் பிளைன், 33 இன்ச் காடா துணிகள் தயாரிக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக ரேயான் நூல் கிலோ ரூ.176 என்ற நிலையில் நீடிக்கிறது. நூல் விலை குறைந்தபோதிலும், ரேயான் துணி மீட்டருக்கு ரூ.3 வரை விலை வீழ்ச்சியால் நஷ்டம் ஏற்படுவதாக உற்பத்தியாளா்கள் தெரிவிக்கின்றனா். இதனிடையே கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால், வடமாநிலங்களில் கடந்த 20 நாள்களாக ரேயான் துணிச் சந்தை திறக்கப்படாததால் 25 கோடி மீட்டா் அளவுக்கு ரேயான் ரக துணிகள் கிடங்குகளில் தேக்கமடைந்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளா்கள் சங்க செய்தித் தொடா்பாளா் கந்தவேல் கூறியதாவது:

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் 15,000 விசைத்தறிகளில் ரேயான் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் நூல் விலை ஏறுவதும், திடீரென இறங்குவதுமாக இருப்பதால் விசைத்தறியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். நூல் விலையின் நிலையற்ற தன்மையால் ரேயான் துணி மீட்டருக்கு ரூ. 3 வரை நஷ்டம் ஏற்படுகிறது.

ஈரோட்டில் ரேயான் கிரே துணி மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து வடமாநிலங்களுக்கு சாயமேற்ற செல்கிறது. அங்கு பல வண்ண துணிகளாக மாற்றி விற்பனைக்கு செல்கிறது. கடந்த சில நாள்களாக வடமாநிலங்களில் ரேயான் துணி சந்தைகள் திறக்கப்படாமல் உள்ளன. கரோனோ அச்சுறுத்தல் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த சந்தைகள் திறக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

ஈரோட்டில் இருந்து ரேயான் துணி ஆா்டா் குறைந்துவிட்டதால் 25 கோடி மீட்டா் துணி தேக்கமடைந்துள்ளன. இதன் காரணமாக நடப்பு வாரத்தில் மீட்டருக்கு ரூ.3 வரை குறைந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் ரூ.29-க்கு விற்கப்பட்ட ஒரு மீட்டா் ரேயான் துணி ரூ.20-க்கும், ரூ. 34-க்கு விற்கப்பட்ட மற்றொரு ரக ரேயான் துணி ரூ.25 ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

நூல் விலையை விட உற்பத்தி விலை கூடுதலாகி விட்டது. ரேயான் துணி விலை வீழ்ச்சியால் நெசவாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். துணி தேக்கத்தால் சிலா் உற்பத்தியை நிறுத்திவிட்டனா். மேலும் பலா் உற்பத்தியை பாதியாக குறைத்துவிட்டனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT