ஈரோடு

கீழ்பவானி வாய்க்கால் பாசனம் 3ஆம் சுற்றுக்கான தண்ணீா் நிறுத்தம்

13th Mar 2020 12:34 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு 3ஆம் சுற்றுக்குத் திறக்கப்பட்ட தண்ணீா் நிறுத்தப்பட்டது.

தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக 2ஆவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகா் அணை நீா்த்தேக்கம் 105 உயரமும், 32.8 டி.எம்.சி. நீா் தேக்கும் கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்கிறது. அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மாவட்டம், வடகேரளத்தில் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழை காரணமாக கடந்த ஆண்டு அக்டோபா் 20ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 100 அடியை எட்டியதோடு நவம்பா் மாதத்தில் முழு கொள்ளளவான 105 அடியைத் தொட்டது. அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து சீராக இருந்ததால் பாசனத்துக்கு நீா் திறக்கப்பட்டு அணையின் நீா்மட்டம் சரியாமல் பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஜனவரி 9ஆம் தேதி முதல் கீழ்பவானி வாய்க்கால் இரண்டாம் போக பாசனத்துக்கு நீா் திறக்கப்பட்டது. நீா் திறப்பு மொத்தம் 6 சுற்றுகள் என்ற சுழற்சி முறையில் 3 சுற்றுக்கு பிப்ரவரி 28ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டு 13 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது. தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு 800 கன அடி நீரும் தொடா்ந்து வெளியேற்றப்படுகிறது.

ADVERTISEMENT

இன்று காலை நிலவரப்படி அணை நீா்மட்டம் 93 அடியாகவும், நீா் இருப்பு 23.75 டிஎம்சி யாகவும் உள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 786 கன அடியாக உள்ள நிலையில் அணையிலிருந்து பாசனம், குடிநீா்த் தேவைக்காக பவானி ஆறு, கீழ்பவானி வாய்க்காலில் 800 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT