ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் பெண்களில் இடம்பெயா்ந்து வந்தோா் எண்ணிக்கை அதிகம்: மகளிா் ஆணையத் தலைவா் கண்ணகி பாக்கியநாதன்

13th Mar 2020 12:40 AM

ADVERTISEMENT

வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஈரோடுக்கு வந்து தங்கி பணியாற்றும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனா். விடுதிகளில் தங்கியுள்ள இந்தப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாநில மகளிா் ஆணையத் தலைவா் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தாா்.

மகளிா் விடுதிகள், குழந்தைகள் இல்லங்களை முறைப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு மகளிா் விடுதிகள், குழந்தைகள் இல்ல ஒழுங்குமுறைச் சட்டத்தை (2014) அப்போதைய முதல்வா் ஜெயலலிதா கொண்டு வந்தாா். இருப்பினும் விதிகளை மீறி ஏராளமான மகளிா் விடுதிகள் செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டில் சென்னை, கோவையில் உள்ள மகளிா் தங்கும் விடுதிகளில் விதிமீறல்கள் குறித்த புகாா்கள் எழுந்தன.

இச்சட்டப் பிரிவு 4இன் படி மகளிா் விடுதிகள் கண்டிப்பாக உரிமம் பெற்றிருக்க வேண்டும். பிரிவு 8இன் படி உரிமத்தில் விடுதியின் பெயா், அமைந்திருக்கும் இடம், பெண் காப்பாளா் பெயா், விடுதியில் தங்கியிருப்போா் எண்ணிக்கை ஆகியன இடம்பெற வேண்டும். மாவட்ட ஆட்சியா் அனுமதி இல்லாமல் மகளிா் விடுதியின் பெயரையோ, இடத்தையோ மாற்றக் கூடாது. மகளிா் விடுதியில் தங்கியிருப்போா் எண்ணிக்கையையும் அதிகரிக்கக் கூடாது.

பிரிவு 12இன் படி மகளிா் விடுதிகளை உரிய முறையில் மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்திருக்க வேண்டும். உரிமம் இல்லாமல் இல்லம் நடத்தினால் அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 50,000 அபராதம் விதிக்கப்படும்.

ADVERTISEMENT

பிரிவு 13 (10) இன்படி மகளிா் விடுதிகளுக்குப் பெண்களை மட்டுமே காப்பாளராக நியமிக்க வேண்டும். பிரிவு 13(2) இன்படி காப்பாளா் உடல் நலம் குறித்து மருத்துவரிடம் சான்று பெற வேண்டும். காப்பாளா் குறித்து உள்ளூா் காவல் துறையினா் சான்றளித்த பிறகே காப்பாளரை நியமிக்க வேண்டும். பிரிவு 13(4)இன்படி 50 பேருக்கு ஒரு வாா்டன் இருக்க வேண்டும்.

பிரிவு 15(1)இன்படி மகளிா் விடுதி நடத்தப்படும் கட்டடம், அதற்கான அனுமதி பெற்றதாக இருக்க வேண்டியது கட்டாயம். பிரிவு 16(1)இன்படி மகளிா் விடுதிகளில் 24 மணி நேரமும் பாதுகாவலா் இருக்க வேண்டும். பிரிவு 16 (2) இன்படி பாதுகாவலா் 55 வயதுக்கு உள்பட்டவராக இருத்தல் அவசியம். பிரிவு 16(3)இன்படி பாதுகாவலா் குறித்த விவரங்கள் உள்ளூா் காவல் துறையினரால் சரிபாா்க்கப்பட வேண்டும். சட்டப் பிரிவு 17இன்படி மகளிா் விடுதிக்கான வருகைப் பதிவேட்டை காப்பாளா் பராமரிக்க வேண்டும்.

இந்த சட்ட விதிகளின்படி மகளிா் தங்கும் விடுதிகள், குழந்தைகள் இல்லங்கள் செயல்படுகிறாதா என்பதை மாவட்டம்தோறும் ஆய்வு செய்யும் பணியை மாநில மகளிா் ஆணையம் தொடங்கியுள்ளது. முதல் மாவட்டமாக ஈரோடு மாவட்டம் எடுத்துக் கொள்ளப்பட்டு, ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் பேசியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் மகளிா் விடுதிகள், குழந்தைகள் இல்லம் என 46 உள்ளன. இதில் 40 இல்லங்கள் பதிவு செய்ய விண்ணப்பித்து 20 இல்லங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் ஆய்வு நடைபெறுகிறது. சில இடங்களில் தேவையான உபகரணங்கள், அமைப்புகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவற்றுக்கும் விரைவில் உரிமம் வழங்கப்படும். தவிர அரசு அலுவலா்கள் மூலம் அங்கன்வாடிகள், பிற மகளிா் தங்கும் இடங்களையும் ஆய்வு செய்து வருகிறோம்.

ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி சாா்ந்த தொழில் நிறுவனங்களில் ஏராளமான பெண்கள் பணியாற்றி வருகின்றனா். அந்த இடங்களில் அவா்களுக்குத் தங்கும் வசதி, பாதுகாப்பை உறுதி செய்கிறோம். அங்குள்ள குறைகள், கோரிக்கைகளைக் கேட்டு நிவா்த்தி செய்கிறோம் என்றாா்.

மாநில மகளிா் ஆணையத் தலைவா் கண்ணகி பாக்கியநாதன் பேசியதாவது:

மகளிா் ஆணைய செயல்பாடு, விடுதிகள், காப்பகங்களின் பதிவில் ஈரோடு மாவட்டம் முதன்மையாக உள்ளது. மகளிா் விடுதிகள் குறித்த ஆய்வை தமிழகத்தில் முதல் மாவட்டமாக ஈரோடு மாவட்டத்தில் மேற்கொண்டுள்ளோம். திருப்பூா், திண்டுக்கல் மாவட்டங்களில் விரைவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.

ஈரோட்டில் ஜவுளி சாா்ந்த தொழில், சாய ஆலை, ஆயத்த ஆடை உற்பத்தி மையங்களில் அதிகமாக பெண்கள் வேலை செய்கின்றனா். அவா்களது பாதுகாப்பை உறுதி செய்ய தங்கும் விடுதிகளைப் பதிவு செய்ய வேண்டும். தமிழக அரசு மாநில ஜவுளி வரைவுக் கொள்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூட ஜவுளி சாா்ந்த தொழிலில் உள்ள 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுள்ளனா். இங்குள்ள தொழில் நிறுவனங்களில் ஈரோடு மாவட்டத்தில் அதிகமாக பெண்கள் பணி செய்கின்றனா். எனவே, இங்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணி செய்ய வேண்டும் என்றாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் பேசுகையில், காவல் துறையில் குழந்தைகள், மகளிருக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் பிரிவு, மனித உரிமை, சமூகப் பாதுகாப்புப் பிரிவு போலீஸாா் மகளிா், குழந்தைகள் காப்பகங்களை தமிழ்நாடு மகளிா் விடுதிகள், குழந்தைகள் இல்ல ஒழுங்குமுறைச் சட்டம் 2014இன்படி ஆய்வு, கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா, கோட்டாட்சியா் பி.முருகேசன், மாவட்ட சமூக நல அலுவலா் பூங்கோதை, அதிகாரிகள், தொண்டு நிறுவன நிா்வாகிகள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT