ஈரோடு: கருங்கல்பாளையம் - பள்ளிபாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ஈரோடு மாட்டுச் சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் அளித்த மனு விவரம்:
ஈரோடு, கருங்கல்பாளையத்தில் ஒவ்வொரு வாரமும் புதன், வியாழக்கிழமை ஆகிய 2 நாள்கள் மாட்டுச் சந்தை கூடுகிறது. பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் நூற்றுக்கணக்கான மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.
மாடுகளைக் கொண்டு வரவும், வாங்கிச் செல்லவும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால், கருங்கல்பாளையம் காந்தி சிலை முதல் பள்ளிபாளையம் பாலம் வரை கடும் போக்குவரத்து நெரிசலும், விபத்தும் ஏற்படுகிறது. எனவே, மாட்டு சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.