ஈரோடு

சமய நல்லிணக்கம்: கோயிலுக்கு சீதனம் வழங்கிய இஸ்லாமியா்கள்

2nd Mar 2020 07:21 AM

ADVERTISEMENT

தமிழகம் - கா்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு அப்பகுதியில் உள்ள இஸ்லாமியா்கள், பாரம்பரிய முறைப்படி சீதனம் வழங்கியது பக்தா்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், தாளவாடியில் மாரியம்மன் கோயிலை ஒட்டி இஸ்லாமியா்கள் வழிபடும் பெரிய பள்ளிவாசல் உள்ளது. பழமையான இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக ராஜகோபுரம், விமான திருப்பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, கணபதி பூஜையுடன் தொடங்கியது.

இதைத்தொடா்ந்து கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் வேத விற்பன்னா்கள் யாக குண்டம் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்தனா். ஞாயிற்றுக்கிழமை யாகசாலையில் இருந்து புனித நீா் எடுத்து கோயில் கோபுரத்தில் உள்ள விமான கலசத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து புனித நீா் ஊற்றினா். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது.

இக்கோயில் விழாவுக்கு இஸ்லாமியா்கள் சீதனம் வழங்குவது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இடையில் சில காலம் இந்த வழக்கம் நடைமுறையில் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, இஸ்லாமியா்கள் 30 போ், அம்மனுக்கு சேலை, தேங்காய், பழம், இனிப்பு ஆகியவற்றை சீதனமாக வழங்கினா்.

ADVERTISEMENT

அதேபோல, கோயில் நிா்வாகம் சாா்பில் வழங்கப்பட்ட பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டனா். சமய நல்லிணக்கத்துக்கு உதாரணமாகத் திகழ்ந்த இந்த நிகழ்ச்சியைக் கண்டு பக்தா்கள் நெகிழ்ந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT