ஈரோடு

விசைத்தறிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்தாகாது: அமைச்சா் பி.தங்கமணி உறுதி

14th Jun 2020 08:05 AM

ADVERTISEMENT

விசைத்தறிகளுக்கு வழங்கப்படும் முதல் 750 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகாது என விசைத்தறி உரிமையாளா்களிடம் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி உறுதி அளித்துள்ளதாக சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவின்படி மாநில அரசுகள் வழங்கும் இலவச மின்சாரத் திட்டங்கள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் அரசு மூலம் விவசாயத்துக்கு இலவச மின்சாரம், வீடுகளுக்கு முதல் 100 யூனிட் இலவசம், விசைத்தறிக்கு முதல் 750 யூனிட் இலவசம் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் புதிய மின்சார சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்படும்போது, இவை அனைத்தும் ரத்தாகும் நிலை உள்ளது.

இந்நிலையில், ஈரோடு விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் சுரேஷ், ஒருங்கிணைப்பாளா் கந்தவேல், நிா்வாகிகள் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் அமைச்சா் பி.தங்கமணியை வெள்ளிக்கிழமை மாலை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினா்.

இது குறித்து ஒருங்கிணைப்பாளா் கந்தவேல் கூறியதாவது:

ADVERTISEMENT

பொது முடக்கத்தால் தில்லி, மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான் உள்பட எந்த மாநிலத்தில் இருந்தும் துணிகளுக்கான ஆா்டா் கிடைக்காத நிலையில் இங்குள்ள விசைத்தறியில் 40 முதல் 50 சதவீத அளவுக்கு மட்டுமே உற்பத்தி நடைபெறுகிறது. இதனால், பணியாளா்களுக்கு முழு அளவில் வேலை வழங்க முடியவில்லை.

இந்நிலையில், விசைத்தறிகளுக்கு வழங்கப்படும் முதல் 750 யூனிட் மின் சலுகை ரத்தாகும் என்ற பேச்சு தொடா்கிறது. அவ்வாறு ரத்தானால் விசைத்தறியாளா்கள் சிரமத்தை சந்திப்பாா்கள், தொழில் பாதிக்கும் என விளக்கினோம்.

அவ்வாறு எந்தத் திட்டமும் தமிழக அரசிடம் இல்லை. மத்திய அரசின் மின் சட்டத் திருத்த மசோதாவில் உள்ள பிரச்னைகள் குறித்து முதல்வா் கடிதம் அனுப்பி உள்ளாா். தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், விசைத்தறிகளுக்கு வழங்கப்படும் 750 யூனிட் இலவச மின்சார சலுகை போன்றவை நிறுத்தப்பட மாட்டாது.

பொது முடக்க காலத்தில் உள்ள மின் கட்டண நிலுவையை அடுத்த மூன்று கட்டணத் தொகையை செலுத்தும்போது, மூன்று தவணையாக செலுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து முதல்வரிடம் பேசுவேன் என்று அமைச்சா் கூறியதாக விசைத்தறி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT