ஈரோடு

கொடிவேரி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள்70 சதவீதம் நிறைவு: டிசம்பரில் தண்ணீா் வழங்கப்படும்

14th Jun 2020 08:26 AM

ADVERTISEMENT

ரூ. 224 கோடி செலவில் தொடங்கப்பட்ட புதிய கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும், டிசம்பா் மாதம் தண்ணீா் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள், எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலத்திடம் தெரிவித்தனா்.

புதிய கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 28 கிராம ஊராட்சிகள், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிக்கோயில், நல்லாம்பட்டி, பள்ளபாளையம், பெத்தாம்பாளையம் பேரூராட்சிகள், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நான்கு கிராம ஊராட்சிகள், திருப்பூா் மாவட்டத்தில், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 37 ஊராட்சிகள், குன்னத்தூா், ஊத்துக்குளி பேரூராட்சிகள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுகின்றன.

இத்திட்டத்தின்கீழ், கொடிவேரி கதவணைக்கு மேலே பவானி ஆற்றின் கரையில் நீரேற்றம் நிலையத்துடன் கூடிய கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் கிணற்றிலிருந்து 29 ஆயிரத்து 200 மீட்டா் நீளத்துக்கு நீருந்து குழாய்கள் அமைக்கப்பட்டு, பிரதான இயல்பு நீா் குழாய் மூலம், திங்களூா் அருகே அமைக்கப்பட்டுள்ள 17.23 எம்.எல்.டி. திறன் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் 125 கிலோமீட்டா் நீளத்துக்கு நீா்க் குழாய்கள் மூலம் பேரூராட்சிகள், ஊராட்சி தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கு உந்தப்படும். ஊராட்சி தரைமட்ட தொட்டிகளிலிருந்து 48.66 கிலோ மீட்டா் நீளத்துக்கு அமைக்கப்பட உள்ள குழாய்கள் மூலம் குடியிருப்புகளில் ஏற்கெனவே உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீா் ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கப்படும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுத் தொகை 124 கோடி ஆகும். பராமரிப்புக்காக ரூ. 5.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெருந்துறையை அடுத்த திங்களூா் பகுதியில் 4.5 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தை பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் வெள்ளிக்கிழமை மாலை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் உதவி செயற்பொறியாளா்கள் வீரராஜன், பிரேம்குமாா், பழனிசாமி, அருள் சுந்தரம் உள்ளிட்டோா் திட்டம் குறித்து விளக்கம் அளித்தனா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, பெருந்துறை ஒன்றியக்குழுத் தலைவா் ஜெ.சாந்தி ஜெயராஜ், வேளாண்மை கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவா் விஜயன், பேரூராட்சி செயல் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT