ஈரோடு:கரோனா நிவாரண நிதியாக ஈரோட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் இரண்டு உண்டியல்களில் சேமித்து வைத்து பணத்தை ஆட்சியர் சி.கதிரவனிடம் இன்று அளித்தனர்.
ஈரோடு எஸ்கேசி சாலை, அதியமான் வீதியை சேர்ந்த காதர்-சரிபா பேகம் தம்பதியரின் இரட்டைக் குழந்தைகள் திருணாஸ் அலி, பஷிகா நிஷா. 16 வயதான இந்த குழந்தைகள் இருவருமே மாற்றுத்திறனாளிகள். இவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு சென்ற போது, அங்கு வழங்கப்பட்ட 2 உண்டியல்களில் பணத்தை சேமித்து வந்தனர்.
புத்தகம் வாங்கும் நோக்கத்தில் சேமிக்கப்பட்ட பணத்தை, கரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர் காதர்-சரிபா பேகம் ஆகியோர் கூறியதாவது, கரோனா பாதிப்பினால் மக்கள் படும் துயரங்களை ஊடகங்கள் வழியாக அறிந்துகொண்ட குழந்தைகள் உண்டியலில் சேமித்த பணத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று எங்களிடம் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து தான் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முதல்வர் பொது நிவாரண நிதிக்கு உண்டியல்களை வழங்கினோம். உண்டியல்கள் நிரம்பி இருந்தன, அதில் எவ்வளவு பணம் இருந்தது என பிறகு தெரிவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர் என்றனர்.