ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் சாய்ந்த லாரி

7th Jun 2020 09:13 PM

ADVERTISEMENT

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், திம்பம் மலைப் பாதையில் மர பாரம் ஏற்றி வந்த லாரி அதிக பாரம் காரணமாக திம்பம் மலைப் பாதையில் சாய்ந்தது. இதில் லாரியில் இருந்த மரங்கள் சாலையில் சிதறிவிழுந்தன.

சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை உள்ளது. இந்த மலைப் பாதை வழியாக தமிழகம் - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கா்நாடக மாநிலம், மைசூருவை அடுத்துள்ள குஷால் நகரில் இருந்து மர பாரம் ஏற்றிய லாரி கோவை செல்வதற்காக திம்பம் மலைப் பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. லாரியை அந்தியூரைச் சோ்ந்த அன்பழகன் ஓட்டினாா்.

திம்பம் மலைப் பாதை 7ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது லாரியில் ஏற்றப்பட்டு இருந்த மரம் சரிந்து சாலையில் விழுந்தது. இதன் காரணமாக லாரி சாய்ந்தது. இதனால் மலைப் பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

சத்தியமங்கலத்தில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் அடிக்கடி திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT