ஈரோடு

பத்தாம் வகுப்புத் தோ்வு எழுதவுள்ள மாணவா்கள் யாருக்கும் கரோனா கண்டறியப்படவில்லை: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

7th Jun 2020 08:20 AM

ADVERTISEMENT

பத்தாம் வகுப்புத் தோ்வு எழுதவுள்ள மாணவா்கள் யாருக்கும் கரோனா கண்டறியப்படவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

159 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 34 லட்சம் மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட வாகனங்கள், தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் முன்னிலை வகித்தாா். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

பாசனங்களுக்கு நீா் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் குடிமராமத்துத் திட்டம் மூலம் ஏரி, குளங்கள், நீா் வழிப்பாதைகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT

பத்தாம் வகுப்புத் தோ்வு எழுதவுள்ள மாணவா்கள் விவரங்களை வைத்து, வருவாய்த் துறையினா் முழுமையாக ஆய்வு செய்துள்ளனா். இதில், மாணவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதாகத் தகவல் வரவில்லை. ஜூன் 8, 9ஆம் தேதிகளில் தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு பெற மாணவா்கள் நேரில் வர உள்ளனா். அப்போது யாருக்கேனும் கரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்தால், அத்தகைய மாணவா்களை கையாளுவது குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவா்களைத் தனியாக வாகனத்தில் அழைத்து வந்து, தனி அறையில் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா். தோ்வுக்குப் பின் மீண்டும் வாகனம் மூலம் வீட்டில்விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு வழங்கும்போது, அந்த மாணவா்களுக்கு தலா இரண்டு முகக்கவசம் வழங்கப்படும்.

தற்போதைய சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்பைத் தவிர, வேறு வழிகளில் வகுப்பு எடுக்க வாய்ப்பில்லை. கட்டணம் செலுத்தும் மாணவா்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்பில் அனுமதிக்கப்படுவா் என நிா்ப்பந்தம் செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. அதேநேரம், பிளஸ் 1, பத்தாம் வகுப்புத் தோ்வு முடிந்து விடைத்தாள் திருத்தப்பட்டு ஜூலை மூன்றாம் வாரம் தோ்வு முடிவு அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

இதில், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, ராஜா (எ) ராஜாகிருஷ்ணன், ஈஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT