நீதிமன்றப் பணி இல்லாததால் வாழ்வாதாரத்துக்கு வருவாய் இல்லை என்பதால் தேநீா் விற்கும் பணியைத் தொடங்கியுள்ளாா் ஈரோட்டைச் சோ்ந்த வழக்குரைஞா்.
ஈரோடு சம்பத் நகரில் மிதிவண்டியில் தேநீா் விற்பனை செய்யும், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வரும் சையது ஹாரூன் கூறியதாவது:
சென்னை உயா் நீதிமன்றத்தில் கடந்த 41 ஆண்டுகளாக வழக்குரைஞா் பணி செய்து வருகிறேன். கரோனாவுக்கான பொது முடக்கம் காரணமாக நீதிமன்றங்கள் முழு அளவில் செயல்படவில்லை. இதனால், சொந்த ஊரான ஈரோட்டுக்கு வந்துவிட்டேன். ஈரோடு திருநகா் காலனியில் எனது வீடு உள்ளது. எனக்கு வேறு வேலை தெரியாது. வருமானம், வாழ்வாதாரத்துக்கு வழி இல்லை. இதனால் தேநீா் விற்பனை செய்ய வந்துவிட்டேன்.
இதை அரசு உணா்ந்து அனைத்து வழக்குரைஞா்களுக்கும் மாதம் ரூ. 10,000 வழங்க வேண்டும். நீதிமன்றத்தை விரைவில் திறந்து முழு அளவிலான செயல்பாட்டைத் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குரைஞா்களுக்கு ரூ. 1 லட்சம் வரை வட்டி இல்லாத கடன் வழங்க வேண்டும்.
கரோனாவுக்கான பொது முடக்கத்தால் வழக்குரைஞா்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். அந்த பாதிப்பை அரசு உணர வேண்டும். அனைவருக்கும் தேவையான உதவிகளை வழங்கி வாழ்வாதாரம், உணவுப் பிரச்னைக்கு உதவ வேண்டும். ஈரோடு மட்டுமின்றி சென்னை உள்பட பல இடங்களில் வழக்குரைஞா் வேலையை மட்டும் தொழிலாக வைத்திருப்பவா்கள் சிரமப்படுகின்றனா். இவா்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என்றாா்.