அனைத்து மாணவா்களுக்கும் பாடப் புத்தகங்கள் படிப்படியாக விநியோகிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு அமைச்சா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் ஆன்லைன் மூலம் மட்டுமே கடன் வழங்க வேண்டும் என்று ரிசா்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் ஆன்லைன் வசதி இல்லாததால் தற்போது தற்காலிகமாக மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக ஒவ்வோா் அமைப்பில் இருந்தும் தலா 2 போ் மட்டுமே கலந்துகொண்டு மாலை அணிவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 31 அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு சாா்பில் தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தப்பட்டு வழக்கம்போல விழா காலை முதல் மதியம் வரை நடைபெறும்.
கல்வித் தொலைக்காட்சி மற்றும் 14 தொலைக்காட்சி சேனல்கள் மூலம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பள்ளி மாணவா்களுக்குப் பாடங்கள் நடத்தப்படும். எந்தெந்த வகுப்புகளுக்கு எந்த நேரத்தில் பாடம் நடத்தப்படும் என்ற அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.
பள்ளிகள் திறப்பது குறித்து மக்கள் கருத்தறிந்து தெரிவிக்க வேண்டுமென்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து பெற்றோா்களின் கருத்துகளைக் கேட்டறிந்து பள்ளிகள் திறப்பதற்கான முடிவு தெரிவிக்கப்படும். தற்போதைய சூழலில் கரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியமில்லை.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்குத் தற்போது பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பணி நிறைவடைந்ததும் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை, பின்னா் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிப்படியாக பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 2.50 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்ய வசதி உள்ளது. ஆனால் தற்போது 3.20 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. உபரியாக கொள்முதல் செய்யப்படும் பால் பதப்படுத்தப்பட்டு வெண்ணெய், பால் பவுடா் உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்றாா்.