தாளவாடி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால், சிக்ஹள்ளி தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி மலைப் பகுதியில் சில நாள்களாக மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை பெய்த மழையால் சிக்ஹள்ளி, நெய்தாளபுரம், முதியனூா் ஆகிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு ஓடைகளில் இருந்து வந்த மழை நீா் காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து சிக்ஹள்ளி தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்றது.
மழை நீரின் வேகம் காரணமாக மரம், செடி, கொடிகள் தண்ணீரில் அடித்துக் கொண்டு தரைப்பாலத்தை கடந்து சென்றதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என வனத் துறை எச்சரித்தது. இதனால், வாகன ஓட்டிகள் வெள்ளம் வடியும் வரை காத்திருந்தனா். 2 அடி உயரம் வரை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், சுமாா் 1 மணி நேரம் தாளவாடி - சிக்ஹள்ளி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெள்ளம் வடிந்த பிறகு இருசக்கர வாகன ஓட்டிகள் பயணிக்கத் துவங்கினா்.
இந்த மழை நீா் கா்நாடகத்தில் கலப்பதால், தமிழக எல்லையில் தடுப்பணை கட்டி சேமிக்க வேண்டும் என தாளவாடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.