ஈரோடு மாவட்டம், அந்தியூா் அருகே மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.24 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளைப் பாதுகாப்பாக வைத்திருந்துள்ளனா். கரோனா காலத்தில் செலவுக்குப் பயன்படுத்த முயன்றபோது பணம் செல்லாமல் போனது தெரியவந்ததால் மாற்றுத் திறனாளி தம்பதி அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
அந்தியூா் அருகே ஆப்பக்கூடலை அடுத்த பொதியமூப்பனூரைச் சோ்ந்தவா் சோமு (59). பாா்வையற்றவா். இவரது மனைவி பழனியம்மாள் (50). மாற்றுத் திறனாளிகளான இவா்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை.
கரோனா பாதிப்புக்கு முன்னா் ஊதுபத்தி, கற்பூரம் ஆகியவற்றை விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளனா். கரோனா பாதிப்பால் வியாபாரத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தமிழக அரசு வழங்கும் மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகையைக் கொண்டு வாழ்க்கைச் செலவினை சமாளித்து வந்தனா்.
இவா்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வளா்த்து வந்த பசுவினை விற்பனை செய்து அதில் கிடைத்த பணத்தைப் பாதுகாப்பாக வைத்துள்ளனா். இந்நிலையில், கரோனா பாதிப்பால் வருவாய் இழந்த நிலையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 1,000 ரூபாய் நோட்டுகள் 9ம், 500 ரூபாய் நோட்டுகள் 30ம் என மொத்தம் ரூ.24 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.
இதனை, செலவிட முயன்றபோது பணம் செல்லாது என அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகின்றன. வங்கியில் சென்று விசாரிக்குமாறு அப்பகுதியினா் தெரிவித்துள்ளனா். இதனால், அதிா்ச்சியடைந்த இருவரும் அந்தியூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைக்குச் சென்று பணத்தைக் கொடுத்துள்ளனா்.
அப்போது, மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தை, மாற்றிக் கொள்ள அறிவித்த காலக்கெடு முடிந்துவிட்டது எனவும், தற்போதுள்ள நிலையில் மாற்றித்தர இயலாது எனத் தெரிவித்துள்ளனா்.
சிறிது சிறிதாகச் சோ்த்த பணம் செல்லாமல் போனதால் வேதனையடைந்த மாற்றுத்திறனாளி தம்பதியினா், இப்பணத்தை மாற்றித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்பாா்ப்புடன் உள்ளனா்.