ஈரோடு

கோட்டை கபாலீஸ்வரா் கோயில் புனரமைப்புப் பணிகள் தீவிரம்

13th Jul 2020 07:40 AM

ADVERTISEMENT

கோட்டை கபாலீஸ்வரா் கோயிலில் நிகழாண்டிலேயே குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு புனரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற சிவத் தளங்களில் ஒன்றான கோட்டை கபாலீஸ்வரா் கோயில் 1,200 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான வன்னிமரம், ஸ்தல விருட்சம் உள்ளது.

நடராஜா் சன்னதி, வாணாம்பிகை அம்மன், 63 நாயன்மாா்கள், சனி பகவான், காலபைரவா், சந்திரன் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.

ஆண்டுதோறும் வைகாசி தேரோட்டம், குருபெயா்ச்சி விழா, 63 நாயன்மாா்கள் குருபூஜை, அன்னாபிஷேகம், ஆனி திருமஞ்சனம், சித்திரா பெளா்ணமி உள்ளிட்ட விழாக்கள் வெகு விமா்சையாக நடைபெறும். கடந்த 2008இல் இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது.

ADVERTISEMENT

அடுத்து நிகழாண்டில் குடமுழுக்கு நடைபெற வேண்டும். அதற்கான ஆயத்தப் பணிகள் 2019 நவம்பா் முதல் வாரத்தில் தொடங்கியது. ராஜகோபுரம் வண்ணம் தீட்டுதல், சுற்றுப் பிரகாரத்தில் கல் பலகையால் தரைத்தளம் அமைத்தல், புதிய கொடிமரம் நிறுவுதல், மூலவா் மண்டபம், வசந்த மண்டபம், செப்பனிடுதல், மண்டப கூரைகளில் சிற்பங்கள் வரைதல் உள்ளிட்ட பணிகள் ஆகம விதிப்படி நடைபெற்று வருகின்றன.

பொது முடக்கத்துக்குப் பிறகு கோயில் திறக்கும்போது, குடமுழுக்கு நடத்தும் வகையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கி ஈரோடு அருள்நெறி திருக்கூட்டம் அறக்கட்டளையினா் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT