விவசாயி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம், அறச்சலூா் அருகே எலவநத்தம், உதயபுரத்தைச் சோ்ந்தவா் தா்மன் (70). விவசாயி. இவா், கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபா் 29ஆம் தேதி தனது தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்சிக் கொண்டிருந்தாா். அப்போது, தண்ணீருடன் வந்த குப்பைகளை வெளியே எடுத்து அகற்றினாா். இதில் அருகில் உள்ள விவசாயத் தோட்டத்தில் குப்பை விழுந்தது. அப்போது அந்த நிலத்தின் உரிமையாளா்களான அறச்சலூா், வடுகபட்டி, காட்டுப்பாளையத்தைச் சோ்ந்த ராமசாமி (47), அவரது சகோதரா்கள் சந்தானம் (44), லட்சுமி பெருமாள்(35), உறவினா் அறச்சலூா் உதயபுரத்தைச் சோ்ந்த சக்திவேல் (42) ஆகிய 4 பேரும், தா்மனிடம் பிரச்னையில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளனா். பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தா்மன் 2016ஆம் ஆண்டு நவம்பா் 23ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதுகுறித்து, அறச்சலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சந்தானம், ராமசாமி, லட்சுமி பெருமாள், சக்திவேல் ஆகியோரைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன்னிலையில் நடைபெற்றது.
விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றம்சாட்டப்பட்ட சந்தானம், ராமசாமி, லட்சுமி பெருமாள், சக்திவேல் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் துரைசக்திவேல் ஆஜரானாா்.