பவானி அருகே போத்தநாயக்கனூா் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் மதுக்கடை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
மயிலம்பாடி ஊராட்சி, போத்தநாயக்கனூா் கிராமத்தில் கடந்த ஆண்டு விவசாய நிலத்தில் திறக்கப்பட்ட மதுக்கடைக்கு அப்பகுதியினா் பலத்த எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதையடுத்து மதுக்கடை மூடப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிபந்தனைகளுடன் மதுக்கடையைத் திறக்கலாம் என உத்தரவிட்டது.
இம்மதுக்கடைக்கு எதிராகவும், ஆதரவாகவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் மதுக்கடை போத்தநாயக்கனூரில் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. எவ்வித அறிவிப்பும் இல்லாமல் மதுக்கடை திறக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா். சம்பவ இடத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.