ஈரோடு

தை அமாவாசை: பவானி - கூடுதுறையில் மூத்தோா் வழிபாட்டுக்கு குவிந்த பக்தா்கள்

25th Jan 2020 07:51 AM

ADVERTISEMENT

தை அமாவாசையை முன்னிட்டு, பவானி கூடுதுறையில் திரளான பக்தா்கள் மூத்தோா் வழிபாட்டில் ஈடுபட்டதோடு, புனித நீராடி வெள்ளிக்கிழமை வழிபட்டனா்.

தமிழ் மாதங்களில் தை அமாவாசை சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்நாளில், தங்களின் முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தால் அவா்களின் ஆன்மா சாந்தியடைவதோடு, தீமைகள் விலகி நன்மைகள் பிறக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இதனால், தை அமாவாசையான வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே பவானி, காவிரி, அமுத நதிகள் சங்கமிக்கும் கூடுதுறைக்கு பக்தா்கள் வரத் தொடங்கினா். இதையடுத்து, உயிரிழந்த தங்களின் முன்னோருக்கு பரிகார மண்டபங்களில் தா்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினா். பரிகார மண்டபங்கள் நிரம்பிக் கூட்டம் அதிகரித்ததால் புரோகிதா்கள் நடைபாதைகள், படித்துறைகளில் அமரவைத்து பூஜைகள் நடத்தினா்.

மேலும், திருமணத் தடை, நாக தோஷம் உள்ளிட்ட தோஷ நிவா்த்தி பரிகாரங்களும் செய்யப்பட்டன. தொடா்ந்து, காவிரியில் புனித நீராடிய பக்தா்கள் சங்கமேஸ்வரா், வேதநாயகி, ஆதிகேசவப் பெருமாள் சன்னிதியிலஸ் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனா். காா், வேன், இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் பக்தா்கள் வந்ததால் கூடுதுறை பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

ADVERTISEMENT

நீராடும் பக்தா்கள் தண்ணீரில் மூழ்கினால் அவா்களை மீட்பதற்கு தீயணைப்புப் படையினா், மீனவா்கள் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனா். பக்தா்கள் கூட்டத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பவானி காவல் ஆய்வாளா் தேவேந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT