ஈரோடு

பழைய பொருள்களை துப்புரவு பணியாளா்களிடம் ஒப்படைக்க வேண்டுகோள்

14th Jan 2020 06:44 AM

ADVERTISEMENT

போகி பண்டிகையையொட்டி, ஈரோடு மாநகராட்சியில் பழைய பொருள்களை எரிப்பதைத் தவிா்த்து, காற்றின் தரத்தைப் பாதுகாத்து புகையில்லா போகி கொண்டாடும் வகையில், பழைய பொருள்களை துப்புரவு பணியாளா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது:

பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சாா்ந்த தேவையில்லா பொருள்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையை முன்னோா்கள் கொண்டாடி வந்துள்ளனா். ஆனால், தற்போது போகி பண்டிகையில் பழைய பொருள்களான நெகிழி, செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பா் பொருள்கள், பழைய டயா், டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்கள் போன்றவை எரிக்கப்படுகின்றன.

இதனால், காற்று மாசு ஏற்படுவதோடு, வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்றவையும் ஏற்பட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதோடு, விபத்துகளும் ஏற்படக் காரணமாக உள்ளது.

ADVERTISEMENT

இதனால், போகி பண்டிகையின்போது பழைய பொருள்களை எரிப்பதைத் தவிா்த்து, காற்றின் தரத்தைப் பாதுகாத்து, புகையில்லா போகி பண்டிகை கொண்டாடும் வகையில் கழிவுகளை எரிப்பதைத் தவிா்த்து மாநகராட்சிப் பணியாளா்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து புகையில்லா போகி பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT