ஈரோடு

திம்பம் மலைப் பாதை சரிவில் சிறுத்தை சடலம் மீட்பு

14th Jan 2020 06:45 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் திம்பம் மலைப் பாதையில் சிறுத்தையின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனப் பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. அண்மையில் நடைபெற்ற கணக்கெடுப்பின்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 120 சிறுத்தைகள் உள்ளதாகத் தெரியவந்தது. திம்பம், பண்ணாரி வனத்தில் மான்கள் அதிக அளவில் இருப்பதால் அதனை வேட்டையாட சிறுத்தை சாலையைக் கடந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், திம்பம் மலைப் பாதையில் உலவிய 5 வயதுள்ள பெண் சிறுத்தை, 11ஆவது வளைவில் உள்ள மலைச் சரிவில் ஏற முயன்றுள்ளது. அப்போது, அது தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டு மரக்கிளையில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு திங்கள்கிழமை வந்த தலமலை வனத் துறையினா் சிறுத்தையின் உடலைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா். சிறுத்தையின் உடலில் இருந்து துா்நாற்றம் வீசியதால் 2 தினங்களுக்கு முன் சிறுத்தை இறந்திருக்கலாம் எனத் தெரிவித்தனா். கால்நடை மருத்துவா் அசோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சிறுத்தையின் உடலை உடற்கூறாய்வு செய்தனா். சிறுத்தை காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதா அல்லது வாகனத்தில் அடிபட்டு மலைச் சரிவில் ஏறும்போது உயிரிழந்துள்ளதா என பரிசோதனையின் முடிவில் தெரியவரும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT