ஊரக உள்ளாட்சித் தோ்தலின்போது மோசமாக நடந்து கொண்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.
ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும், அனைத்து ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களும் கருப்புப் பட்டை அணிந்து பணி செய்தனா். உணவு இடைவெளியின்போது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டம் குறித்து ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கூறியதாவது:
ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, கடலூா், விழுப்புரம், விருதுநகா் உள்பட பல இடங்களில் பணியாளா்களிடம், அரசியல் கட்சியினா் உள்பட பலரும் மோசமாக நடந்துகொண்டனா்.
தாக்குதல், மிரட்டுதல் என பல சம்பவங்கள் நடந்துள்ளன. வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு ஊழியா்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை தொடா்கிறது. இதுகுறித்து அரசுத் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனா்.