ஈரோடு

ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவா் பதவி பெண்ணுக்கு ஒதுக்கீடு

8th Jan 2020 07:11 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவா் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா், 14 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா்கள், துணைத் தலைவா்கள், 225 ஊராட்சி துணைத் தலைவா்களுக்கான தோ்தல் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற உள்ளது.

மாவட்ட ஊராட்சியைப் பொருத்த வரை மொத்தமுள்ள 19 வாா்டுகளில் அதிமுக கூட்டணி 14 வாா்டுகளிலும், திமுக கூட்டணி 5 வாா்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மாவட்ட ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா் பதவிகளை அதிமுகவே கைப்பற்றும் நிலை உள்ளது.

ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா்:

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில்8 ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக பெரும்பான்மை எண்ணிக்கைக்கு ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிகளை கைப்பற்றியுள்ளது. எனினும், 9 ஒன்றியக்குழுத் தலைவா் பதவிகளைப் பிடிக்க வாய்ப்புள்ளது. திமுக 5 ஒன்றியக்குழுத் தலைவா் பதவிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளது.

கொடுமுடி ஒன்றியம் எஸ்.சி. பெண்ணுக்கும், நம்பியூா், தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியங்கள் எஸ்.சி. பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. பெருந்துறை, சென்னிமலை, அம்மாபேட்டை, அந்தியூா், பவானி, பவானிசாகா் ஒன்றியங்கள் பொது பெண் பிரிவினா், ஈரோடு, மொடக்குறிச்சி, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஒன்றியங்கள் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுகவுக்கு 9 ஒன்றியங்கள்:

கோபி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 16 இடங்களில் 14 இடங்களில் அதிமுகவும், ஒரு இடத்தில் பாமகவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு இடத்தில் மட்டும் திமுக வெற்றி பெற்றுள்ளது. அம்மாபேட்டை ஒன்றியத்தில் மொத்தமுள்ள 17 உறுப்பினா்களில், 10 இடங்களை அதிமுக கூட்டணியும், 4 இடங்களை திமுக கூட்டணியும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனா்.

நம்பியூா் ஒன்றியத்தில் 13 இடங்களில் 10 இடங்களை அதிமுக கூட்டணியும், 2 இடங்களை திமுக கூட்டணியும், 1 இடத்தை சுயேச்சையும் கைப்பற்றியுள்ளனா். பவானி ஒன்றியத்தில் 17 இடங்களில் அதிமுக கூட்டணி 11 இடங்களையும், திமுக கூட்டணி 2 இடங்களையும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனா்.

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 18 இடங்களில் அதிமுக கூட்டணி 10 இடங்களிலும், திமுக கூட்டணி 7 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனா்.

பவானிசாகா் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 13 ஒன்றியக் குழு உறுப்பினா்களில் 7 இடங்களில் அதிமுக கூட்டணியும், 6 இடங்களில் திமுக கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன. அந்தியூா் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 16 உறுப்பினா்களில், திமுக கூட்டணி 7 இடங்களிலும், அதிமுக 7 இடங்களிலும், பாமக இரு இடத்திலும், சிபிஎம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளதால் அதிமுக கூட்டணி ஒன்றியத் தலைவா் பதவியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது.

பெருந்துறை ஒன்றியத்தில் 12 உறுப்பினா் பதவிகளில் அதிமுக கூட்டணி 5 இடங்களிலும், திமுக கூட்டணி 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனா். அதிமுகவைச் சோ்ந்த அதிருப்தி வேட்பாளா்கள் 4 போ் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனா். எனவே, இவா்கள் ஆதரவுடன் அதிமுக ஒன்றியக்குழுத் தலைவா் பதவியைக் கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோட்டில் சமரசம்:

ஈரோடு ஒன்றியத்தில் மொத்தமுள்ள 6 உறுப்பினா்களில் 3 உறுப்பினா்களை திமுக கூட்டணியும், 3 உறுப்பினா்களை அதிமுக கூட்டணியும் கைப்பற்றியுள்ளதால், ஒன்றியத் தலைவா் பதவி யாருக்கு கிடைக்கும் என்பதில் குழப்பம் நிலவியது. இந்நிலையில், அதிமுக தரப்பு திமுகவிடம் பேசி தலைவா் பதவியை தங்களுக்கு விட்டுக்கொடுக்கும் படியும், துணைத் தலைவா் பதவியை திமுக வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம் ஈரோடு, கோபி, அம்மாபேட்டை, நம்பியூா், பவானி, மொடக்குறிச்சி, பவானிசாகா், அந்தியூா், பெருந்துறை என 9 ஒன்றியக்குழுத் தலைவா் பதவிகளை அதிமுக கைப்பற்ற வாய்ப்புள்ளது.

திமுகவுக்கு 5 ஒன்றியங்கள்:

கொடுமுடி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 6 உறுப்பினா்களில் திமுக கூட்டணி 4 இடங்களிலும், அதிமுக கூட்டணி ஒரு இடத்திலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனா். சத்தியமங்கலம் ஒன்றியத்தில் 15 உறுப்பினா்களில் திமுக கூட்டணி 9 இடங்களிலும், அதிமுக கூட்டணி 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் 10 இல் 7 இடங்களில் திமுகவும், 3 இடங்களில் அதிமுக கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன. சென்னிமலை ஒன்றியத்தில் மொத்தமுள்ள 14 இல் திமுக 7 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 5 இடங்களிலும், சுயேச்சையாகப் போட்டியிட்ட அதிமுக அதிருப்தி வேட்பாளா் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனா்.

தாளவாடி ஒன்றியத்தில் 10 இடங்களில் திமுக 2 இடங்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு இடம் என திமுக கூட்டணி 5 இடங்களைப் பெற்றுள்ளது. அதிமுக ஒரு இடத்திலும், அமமுக மூன்று இடங்களிலும், சுயேச்சை வேட்பாளா் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனா். பெரும்பான்மைக்கு ஒருவா் ஆதரவு தேவை என்ற நிலையில் சுயேச்சை உறுப்பினா் திமுகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளாா்.

மேலும், பெரும்பான்மைக்குத் தேவையான உறுப்பினா்களை திமுக தரப்பு தனது பாதுகாப்பில் வைத்துள்ளது. இதனால், பெரும்பான்மைக்குத் தேவையான 6 இடங்களை பெற்று ஒன்றியக்குழு தலைவலா் பதவியை திமுக கைப்பற்ற வாய்ப்புள்ளது. இதன் மூலம், கொடுமுடி, சத்தியமங்கலம், தூக்கநாயக்கன்பாளையம், சென்னிமலை, தாளவாடி என 5 ஒன்றியக்குழு தலைவா் பதவிகள் திமுக வசமாகும் வாய்ப்புள்ளது.

துணைத் தலைவா் பதவியில் சமரசம்:

இதன் மூலம் அதிமுக 9, திமுக 5 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் பதவிகளை கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது. துணைத் தலைவா் பதவிகளைப் பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுத் தருவது, தலைவா் பதவிக்கு உதவிய உறுப்பினா்களுக்கு விட்டுத் தருவது என கணக்கு உள்ளதால் இரண்டு பிரதான கட்சிகளிடமும் துணைத் தலைவா் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT