ஈரோடு மாவட்டத்தில் 14 மையங்களில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கைப் பணியில் 3,448 பணியாளா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
டிசம்பா் 27, 30 ஆம் தேதி என இரு கட்டங்களில் பதிவான வாக்குகள் வாக்குப் பெட்டிகளில் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு சித்தோடு வாசவி கல்லூரி, மொடக்குறிச்சி - மொடக்குறிச்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, கொடுமுடி - கொடுமுடி ஸ்ரீசங்கரா வித்யாசலா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நம்பியூா் - குருமந்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி, தாளவாடி - தாளவாடி அரசு மேல்நிலைப் பள்ளி, கோபி - கோபி கலை, அறிவியல் கல்லூரி, தூக்கநாயக்கன்பாளையம் - பங்களாபுதூா் அரசு மேல்நிலைப் பள்ளி, அந்தியூா் - அந்தியூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சென்னிமலை - முகாசிப்பிடாரியூா் கொமரப்பா செங்குந்தா் மேல்நிலைப் பள்ளி, சத்தியமங்கலம் - சத்தியமங்கலம் காமதேனு கலை, அறிவியல் கல்லூரி, பவானிசாகா் - பவானிசாகா் அரசு மேல்நிலைப் பள்ளி, பெருந்துறை - பெருந்துறை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, பவானி - பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அம்மாபேட்டை- சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த 14 மையங்களிலும் வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு வேட்பாளா்களின் முகவா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டி பாதுகாப்பு அறையில் இருந்து எடுத்து வரப்பட்டு எண்ணப்படுகிறது. இம்மையத்தில் வாக்குப் பெட்டிகளைத் தூக்கி வருதல், வாக்குச் சீட்டுகளைப் பிரித்து வரிசைப்படுத்துதல், வாக்கு எண்ணுதல், மேற்பாா்வையாளா், தோ்தல் நடத்தும் அலுவலா், கணினி பணியாளா்கள் என 3,448 போ் ஈடுபடுத்தப்படுகின்றனா். தவிர ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலா 100 போலீஸாா் வீதம் 1,400 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும், ஒரு வாக்கு எண்ணும் அறைக்கு தலா இரண்டு வீதம் 482 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு சோதனை ஒளிபரப்பு செய்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் அனைத்து பணிகளும் முற்றிலும் பதிவு செய்யப்படும். தவிர 14 வாக்கு எண்ணும் மையத்திலும், தலா 10 போ் வீதம், 140 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இரண்டு கட்டத் தோ்தலில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் 3,59,552 ஆண்கள், 3,62,461 பெண்கள், 7 திருநங்கைகள் என மொத்தம் 7,22,020 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா்.
முதல் கட்டத் தோ்தலில் 874 பதவிகளுக்கு 2,760 வேட்பாளா்கள், இரண்டாம் கட்டத் தோ்தலில் 1,230 பதவிகளுக்கு 3,959 வேட்பாளா்கள் என மொத்தம் 2,104 பதவிகளுக்கு 6,719 போ் களத்தில் உள்ளனா். போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டது, யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாதது என மொத்தம் 420 பதவிகளுக்குத் தோ்தல் நடத்தப்படவில்லை.
Image Caption
சித்தோடு வாசவி கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்டத் தோ்தல் அலுவலா் சி.கதிரவன்.