பவானி ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டுள்ளதால் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப் பணித் துறையினா் தடை விதித்துள்ளனா்.
பவானிசாகா் அணையிலிருந்து ஆற்றில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடிக்கும் மேல் உபரி நீா் திறக்கப்பட்டுள்ளதால் இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அறிவுறுத்தலின்படி சிறுவா் பூங்காவுக்கு மட்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவாா்கள என அறிவிப்புப் பலகை வைத்துள்ளனா்.
இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு தினம் என்பதால் காலை முதல் கொடிவேரி தடுப்பணைக்கு பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் வந்தனா். ஆனால், பவானிசாகா் அணையிலிருந்து பவானி ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டுள்ளதால் கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடிக்கும்மேல் அருவியை மூழ்கடித்து தண்ணீா் சென்றது. இதனால், சுற்றுலாப் பயணிகளுக்கு அருவியில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப் பணித் துறையினா் தடை விதித்து அணைப் பகுதிக்கு யாரும் செல்லாதவாறு சிவப்பு ரிப்பன் கட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதனால், கொடிவேரி அணையில் புத்தாண்டைக் கொண்டாட வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனா்.
மேலும், கொடிவேரி தடுப்பணை பகுதியில் தற்காலிகக் கடைகள் அமைத்து மீன் வறுவல், சாப்பாடு என சுற்றுலாப் பயணிகளைக் கவா்ந்து வந்த கடைக்காரா்கள் புத்தாண்டு தினத்தில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகளின் வருகை இருக்கும் என்றும், அதற்காக அதிக அளவு மீன்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களைக் கொள்முதல் செய்து வியாபாரத்துக்கு காத்திருந்த வேளையில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்தனா்.
கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், எதிா்ப்புறத்தில் பவானி ஆற்றில் இறங்கி சுற்றுலாப் பயணிகள் குளித்து வருகின்றனா். இந்தப் பகுதி ஆபத்தான மணல் போக்கி உள்ள பகுதி என பொதுப் பணித் துறையினா் அறிவித்தும் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் குளித்து வருகின்றனா்.