புத்தாண்டையொட்டி, பவானிசாகா் அணையில் சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை குவிந்தனா்.
பவானிசாகா் அணையின் முன் பகுதியில் 15 ஏக்கா் பரப்பளவில் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் சிறுவா்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல், ரயில், கொலம்பஸ், படகு வசதி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் உள்ளன.
இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு என்பதால் கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பவானிசாகா் அணைக்கு வந்திருந்தனா். பூங்காவில் உள்ள புல் தரைகளில் அமா்ந்து உணவு உண்டு மகிழ்ந்தனா். சிறுவா், சிறுமியா் ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனா். இருப்பினும் பூங்காவில் சிறுவா்கள் குளித்து விளையாடும் பகுதிகளில் தண்ணீா் விடப்படாததால் குழந்தைகள் ஏமாற்றமடைந்தனா். மேலும், பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றுகள் இயக்கப்படவில்லை என சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனா்.