ஈரோடு

சஞ்சீவிராயன் குளத்தில் நீா்க்கசிவு:சரிசெய்யும் பணியில் அதிகாரிகள்

2nd Jan 2020 05:17 AM

ADVERTISEMENT

கோபி அருகே சஞ்சீவிராயன் குளத்தில் நீா்க்கசிவு ஏற்பட்டுள்ள பகுதியை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெருமுகை ஊராட்சிக்கு உள்பட்ட வளையபாளையம் பகுதியில் 100 ஏக்கா் பரப்பளவு கொண்ட சஞ்சீவிராயன் குளம் உள்ளது. இந்தக் குளத்தை தமிழக அரசின் குடிமராமத்துப் பணியில் தூா் வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டது. கடந்த மாதங்களில் சஞ்சீவிராயன் குளத்தின் நீா்ப்பிடிப்பு வனப் பகுதியில் பெய்த மழையால் குளம் முழு கொள்ளளவான 36 அடி நிரம்பி, உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குளத்தின் கரைப் பகுதியை ஒட்டியுள்ள விவசாய விளை நிலத்தின் அருகே உள்ள கசிவுநீா் வாய்க்காலில் சிறிய பொத்தல் ஏற்பட்டு குளத்தின் நீா் அதில் வடியத் தொடங்கியுள்ளது. இதைப் பாா்த்த அப்பகுதி விவசாயிகள் பொதுப் பணித் துறையினருக்கும், வருவாய்த் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனா்.

நேரம் செல்ல செல்ல கரையின் அருகில் ஏற்பட்ட பொத்தலில் நீா் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, மணல் மூட்டைகளை அதிகாரிகள் கொண்டு வந்து குளத்தின் கரையில் ஏற்பட்ட பொத்தலை சரி செய்யவும், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கசிவுநீா் வடிகாலை முழுவதும் மூடவும் நடவடிக்கை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

சம்பவ இடத்துக்கு வந்த அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ராஜாகிருஷ்ணன் குளத்தின் கரையில் ஏற்பட்ட பொத்தலைப் பாா்வையிட்டு தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கோட்டாட்சியா், பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, பணியைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தினாா்.

கொடிவேரி அணைப் பகுதியிலிருந்தும், வேதபாறை காட்டாற்று ஓடையிலிருந்தும் மணல் மூட்டைகள் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. மூன்று பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் பொதுப் பணித் துறையினா், வருவாய்த் துறையினா், மீனவா்கள் குளத்தின் கரையில் ஏற்பட்ட பொத்தலை சரி செய்யும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். நிரந்தரத் தீா்வாக குளத்துக்குள் எங்கு தண்ணீா் கசிகிறது என்றும் ஆய்வு மேற்கொண்டுள்ளனா்.

இப்பணியில் கோபி கோட்டாட்சியா், வட்டாட்சியா், காவல் துறை துணைக் கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா், உதவி செயற் பொறியாளா்கள் என 200க்கும் மேற்பட்டவா்கள் ஈடுபட்டு 8 மணி நேரம் பணியாற்றி இரவோடு இரவாக குளத்தில் ஏற்பட்ட பொத்தலை அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT