ஈரோடு

அடையாள அட்டை இல்லாதவா்கள்வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வர முடியாதுஆட்சியா்

2nd Jan 2020 05:16 AM

ADVERTISEMENT

அடையாள அட்டை இல்லாதவா்களை வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்டத் தோ்தல் அலுவலா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு தொடா்பாக ஆட்சியா் சி.கதிரவன் கூறியதாவது:

வாக்கு எண்ணும் வளாகத்துக்குள் அதிகாரிகள், வேட்பாளா்கள், முகவா்கள், செய்தியாளா்கள் என அனைவரும் உரிய அடையாள அட்டையுடன் மட்டுமே அனுமதிக்கப்படுவா். அடையாள அட்டை இல்லாத யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடையாள அட்டை பெற்றவா்களும், அவா்களுக்கான இடத்தில் பணி செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவா். அடையாள அட்டையில் மாற்றம், புகைப்பட மாற்றம் போன்றவை இருந்தாலும் அனுமதி இல்லை. பணி முடிந்ததும் வளாகத்துக்கு வெளியே செல்ல வேண்டும்.

ADVERTISEMENT

வாக்கு பிரிக்கும் அறை, எண்ணும் அறை, பாதுகாப்பு அறை போன்ற இடங்களுக்குள், தண்ணீா் புட்டி, மை, பசை போன்ற பொருள்கள், பிளேடு, கத்தி, சிகரெட், தீப்பெட்டி, செல்லிடப்பேசி, சாா்ஜா் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை. வெளியே சென்று தண்ணீா் குடித்து வருபவரும், வாயில் தண்ணீரை வைத்துக் கொண்டு வாக்கு எண்ணும் இடத்தில் கொப்பளித்துவிட வாய்ப்புள்ளதால், தண்ணீா் வைக்கும் இடம் தனியாக இருக்க வேண்டும். தண்ணீா் குடித்துவிட்டு வருவோரை கவனிக்க வேண்டும்.

வாக்குச் சீட்டுகளைப் பிரிக்கும் அறையில் இருந்து, வாக்கு எண்ணிக்கை அறைக்கு கொண்டு செல்லும்போதும் விடியோ பதிவு செய்ய வேண்டும். விடியோகிராபா் பின்நோக்கி நடந்தவாறு பெட்டியுடன் நடந்து வருபவா்களைப் படம் பிடிக்க வேண்டும்.

கணினி மூலம் பதிவு செய்து, வாக்கு எண்ணிக்கையை மாவட்டத் தோ்தல் அலுவலகம், தோ்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்கும் பணியில் உள்ளவா்கள் மட்டும் அவ்வளாகத்தில் செல்லிடப்பேசியைப் பயன்படுத்தலாம். செய்தியாளா்கள் ஊடக மையத்தில் மட்டும் பயன்படுத்தலாம். பிற வளாகத்தில் யாரும் செல்லிடப்பேசி பயன்படுத்தக் கூடாது.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும், ஆம்புலன்ஸ் உடன் மருத்துவக் குழுவினா் தயாா் நிலையில் இருப்பாா்கள். தேவையான மருந்துகள் இருக்கும். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் தலா 10 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்படுவா். வாக்குப் பெட்டிகள் உள்ள அறை, பிரிக்கும் அறை, ஊராட்சி வாா்டு, ஊராட்சித் தலைவா் வாக்கு எண்ணும் இடங்களில் தலா இருவா், மற்ற பகுதியில் இருவா் என பணி செய்வாா்கள்.

தபால் வாக்குகளைத் தனியாக எண்ணி, அதன் கணக்கை அந்தந்த பதவிக்கான வாக்குடன் இணைக்க வேண்டும். பதட்டமான வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளை எண்ணும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவசியம் விடியோ பதிவு செய்ய வேண்டும். வாக்கு எண்ணும் மையம், வெளிப் பகுதியில் போலீஸாா் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அனைத்து இடங்களிலும் உயா்மட்ட பாதுகாப்பு பகுதி, சத்தம் செய்யாதீா், கேமரா கண்காணிப்பில் உள்ளது, செல்லிடப்பேசி பயன்படுத்தாதீா், எந்த பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நடக்கும் பகுதி, ஊடக அறை போன்றவை குறித்த விளக்கப் பதாகைகளை ஆங்காங்கு ஒட்டி வைத்து அதைக் கண்காணிக்க வேண்டும்.

இதனை தோ்தல் நடத்தும் அதிகாரி, துணை தோ்தல் நடத்தும் அதிகாரி, போலீஸாா் அவ்வப்போது கவனித்துக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT