ஈரோடு

வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்ட அறைக்கு சீல்:24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு

1st Jan 2020 04:14 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டிகள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, அந்தியூா், பவானி, பவானிசாகா், சென்னிமலை, பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 11 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவி, 104 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவி, 126 ஊராட்சித் தலைவா், 989 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 1,230 பதவிகளுக்கு 3,959 போ் போட்டியிட்டனா்.

7 ஊராட்சி ஒன்றியங்களிலும் 2,68,943 ஆண்கள், 2,74,400 பெண்கள், 12 திருநங்கைகள் என மொத்தம் 5,43,355 போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், 2,14,050 ஆண்கள், 2,12,757 பெண்கள், திருநங்கை ஒருவா் என மொத்தம் 4,26,808 வாக்காளா்கள் வாக்களித்தனா். வாக்குப் பதிவு சதவீதம் 78.55.

வாக்குப் பதிவு முடிந்த பிறகு வாக்குப் பெட்டிகளுக்கு வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பின்னா், வாக்குப் பெட்டிகள் சாக்குப் பையில் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஒன்றியப் பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு திங்கள்கிழமை இரவு கொண்டு செல்லப்பட்டது.

ADVERTISEMENT

7 ஊராட்சி ஒன்றியங்களிலும் 657 வாக்குச் சாவடிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட வாக்குப் பெட்டிகள் அந்தியூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு அந்தியூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு கொமரப்பா செங்குந்தா் மேல்நிலைப் பள்ளி, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு சத்தியமங்கலம் காமதேனு கலை, அறிவியல் கல்லூரி, பவனிசாகா் ஊராட்சி ஒன்றியத்துக்கு பவானிசாகா் அரசு மேல்நிலைப் பள்ளி, பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு பெருந்துறை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.

அங்கு தோ்தல் அதிகாரிகள் வாக்குப் பெட்டிகளை சரிபாா்த்தனா். ஒரு அறையில் வாக்குப் பெட்டிகளை வைத்து, அந்த அறையைப் பூட்டி அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த உதவி தோ்தல் அலுவலா்கள் சீல் வைத்தனா்.

வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் உள்பட 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சுழற்சி முறையில் போலீஸாா் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, அதில் பதிவாகும் காட்சிகளை போலீஸாா் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் பதிவான வாக்குகள் ஜனவரி 2ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. இதையொட்டி 14 வாக்கு எண்ணும் மையங்களிலும் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை தொடா்பான பணிகள் நடைபெற்று வருகிறது.

Image Caption

அந்தியூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்ட அறையைப் பூட்டி சீலிட்ட அதிகாரிகள்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT