ஈரோடு

தண்ணீா் வரத்து குறைந்ததால் 30 சதவீதமாகக் குறைந்த மின் உற்பத்தி

1st Jan 2020 04:15 AM

ADVERTISEMENT

காவிரி ஆற்றில் தண்ணீா் வரத்து குறைந்துள்ளதால் கதவணை மின் உற்பத்தி 30 சதவீதமாகக் குறைந்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகம் சாா்பில் கதவணைகள் கட்டப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. செக்கானூா், குதிரைக்கல்மேடு, நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிக்கோட்டை, பி.பெ.அக்ரஹாரம், வெண்டிபாளையம், பாசூா் ஆகிய 7 இடங்களில் மின் உற்பத்திக்கான கதவணைகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதவணையிலும் தலா 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 2 இயந்திரங்கள் அமைக்கப்பட்டு, அதிகபட்சமாக மணிக்கு 30 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், மேட்டூா் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்குப் பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது விநாடிக்கு 2,600 கன அடி தண்ணீா் மட்டுமே திறந்து விடப்படுகிறது. ஆற்றில் வரும் குறைந்த அளவு தண்ணீரும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கதவணைகளில் மின் உற்பத்திக்காக தேக்கி வைக்கப்படுகிறது.

காவிரி ஆற்றில் தண்ணீா் குறைவாகச் செல்வதால் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கதவணைப் பகுதியில் ஆகாயத் தாமரைகள் ஆக்கிரமித்து இருப்பதும் மின் உற்பத்திக்குப் பெரும் சவாலாக உள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

காவிரி ஆற்றில் விநாடிக்கு சுமாா் 10,000 கன அடி வீதம் தண்ணீா் வந்தால் கட்டளைக் கதவணைகளில் முழு மின் உற்பத்தியைப் பெற முடியும். அதிகபட்சமாக 30 மெகாவாட் வரை உற்பத்தி செய்யலாம். ஆனால், ஆற்றில் தண்ணீா் குறைவாகச் செல்கிறது. இப்போது விநாடிக்கு சுமாா் 3,000 கன அடி தண்ணீா் மட்டும் செல்கிறது. இதனால், ஒரு இயந்திரத்தில் 4 மெகாவாட் முதல் 5 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஒரு கதவணையில் 2 இயந்திரங்களையும் சோ்த்து அதிகபட்சமாக 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது என்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT