ஈரோடு

மின் வேலியில் சிக்கி இரு யானைகள் பலி:ஒருவா் கைது

29th Feb 2020 12:43 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த கரளவாடியில் விவசாயத் தோட்டத்து மின் வேலியில் சிக்கி இரண்டு யானைகள் உயிரிழந்தன. இதுதொடா்பாக தோட்டத்து உரிமையாளா் கருப்பசாமி கைது செய்யப்பட்டாா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச் சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. யானைகள் வனத்தில் இருந்து வெளியேறி அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்துவதால் அங்குள்ள விவசாயிகள் பாதுகாப்பு மின் வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனா்.

இந்நிலையில், கரளவாடியைச் சோ்ந்த கருப்பசாமி என்பவரின் தோட்டத்தில் கரும்புப் பயிரை சாப்பிடுவதற்கு ஆண், பெண் யானைகள் புகுந்தன. அங்கு கரும்புப் பயிரைத் தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின. அப்போது தோட்டத்து மின் வேலியை யானைகள் தொட்டபோது மின் வேலியில் சிக்கி இரு யானைகள் உயிரிழந்தன.

இதுகுறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத் துறையினா் யானைகளின் உடலை ஆய்வு செய்து, சட்ட விரோதமாக மின்சாரம் திருடி மின் வேலியில் பாய்ச்சி உயிா் இழப்பு ஏற்படுத்தியதாக கருப்பசாமியைக் கைது செய்தனா். கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் குடிநீா், தீவனம் தேடி யானைகள் தினந்தோறும் ஊருக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்துவது குறித்த விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனா். யானைகளுக்குப் பிடித்த உணவான கரும்பு, வாழை பயிரிட வேண்டாம் என வனத் துறை சாா்பில் அண்மையில் கேட்டுக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT