ஈரோடு

கிறிஸ்துவர்களின் தவக்காலம்: ஈரோடு ஆலயத்தில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு வழிபாடு

26th Feb 2020 05:24 PM

ADVERTISEMENT


ஈரோடு: கிறிஸ்துவர்களின் தவக்காலம் தொடங்கியதையடுத்து ஈரோட்டு புனித அமல அன்னை ஆலயத்தில் சாம்பலால் சிலுவை அடையாளமிடும் வழிபாடு இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

இயேசு கிறிஸ்து பாடுபட்டு சிலுவையில் உயிர்விட்ட தினத்தை உலகம் முழுவதும் கிறிஸ்துவர்களால் புனித வெள்ளியாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு 40 நாட்கள் நோன்பு இருப்பது வழக்கம். இந்த நோன்பு காலம் தவக்காலம் என்று அழைக்கப்படுகிறது. 

தவக்காலத்தின் முதல் நாள் சாம்பல் புதன் அல்லது திருநீற்றுப் புதனாகக் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இன்றுதவக்காலம் தொடங்கியது. இதையொட்டி கிறிஸ்துவ தேவாலயங்களில் இன்று காலை சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜான் சேவியர் குழந்தை தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தவக்காலம் தொடங்கியதன் அடையாளமாகக் கிறிஸ்துவர்களின் நெற்றியில் பங்குத்தந்தை சாம்பலால் சிலுவை அடையாளம் இட்டார்.

ADVERTISEMENT

இந்த சாம்பல், கடந்த ஆண்டு குருத்தோலை திருநாளின் போது ஊர்வலமாக எடுத்துச்சென்று வீடுகளில் வைக்கப்பட்டு இருந்தவையாகும். அவற்றை சேகரித்து சுட்டு சாம்பலாக்கி நெற்றியில் பூச பயன்படுத்தப்பட்டது.

சாம்பல் நெற்றியில் பூசும்போது மனிதனே மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் என்று கூறி பங்குத்தந்தை ஒவ்வொருவரின் நெற்றியிலும் சிலுவை அடையாளம் வரைந்தார். இதன் தொடர்ச்சியாக இன்று மாலையும் திருப்பலி நடக்கிறது.

Tags : Lenten season
ADVERTISEMENT
ADVERTISEMENT