ஈரோடு: திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மெக்கானிக்குக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, மாணிக்கம்பாளையம் நேதாஜி நகரைச் சேர்ந்த மெக்கானிக் கார்த்தி (31). இவருக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில் 17 வயது சிறுமியுடன் கார்த்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி அந்தச் சிறுமியை கடந்த 15.01.2016-இல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில் ஈரோடு மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கார்த்தியைக் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த ஈரோடு மகளிர் நீதிமன்ற நீதிபதி மாலதி இன்று தீர்ப்பளித்தார். அதில் மெக்கானிக் கார்த்திக்குக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ 25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.1.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.