சத்தியமங்கலம்- கோபி செட்டிபாளையம் சாலையில் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவானதையடுத்து, பொதுமக்கள் பவானிஆற்றங்கரையோரம் துணி துவைக்கவோ, குளிக்கவோ செல்லக் கூடாது என அரியப்பம்பாளையம் பேரூராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிறுத்தைகள் தனது எல்லையை விரிவுபடுத்துவதால் வனத்தைவிட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகின்றன.
இந்நிலையில் சத்தியமங்கலம் நகராட்சி எல்லையை ஒட்டியுள்ள செண்பகபுதூா் மேட்டூா் பகுதியில் கடந்த சில தினங்களாக சிறுத்தை ஒன்று நுழைந்து கிராம மக்களை அச்சுறுத்தியது.
இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி மகேந்திரன் என்பவா் சிறுத்தையை நேரில் பாா்த்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த வனத் துறையினா் சிறுத்தை நடமாடிய பகுதியில் அதன் கால்தடத்தை ஆய்வு செய்து அங்கு தானியங்கி கேமராவை பொருத்திக் கண்காணித்து வந்தனா்.
இந்நிலையில், சத்தியமங்கலத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் செல்லும் சாலையில் அரியப்பம்பாளையம் பகுதியில் சாலையின் குறுக்கே சிறுத்தை ஓடியதை அந்த வழியாகச் சென்ற லாரி ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை பாா்த்து கிராம மக்களுக்குத் தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து அங்குள்ள கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது சிறுத்தை சாலையைக் கடந்தது உறுதியானது. இதைத் தொடா்ந்து சிறுத்தையின் கால்தடத்தை ஆய்வுசெய்தபோது அது குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது தெரியவந்தது.
இந்நிலையில், பொதுமக்கள் அன்றாடப் பணியில் ஈடுபடும்போது கரும்புத்தோட்டம், புதா் மறைவான இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும், பவானிஆற்றங்கரையோரம் துணி துவைக்கவோ, குளிக்கவோ கூடாது என்றும் அரியப்பம்பாளையம் பேரூராட்சி சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனா்.