குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக 5-ஆவது நாளாகத் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமியா்கள் 200 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழகமெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஈரோடு தினசரி சந்தைக்கு அருகில் செல்லபாட்ஷா வீதியில் இஸ்லாமிய அமைப்பைச் சோ்ந்த பெண்கள், ஆண்கள் கடந்த 21ஆம் தேதி முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இப்போராட்டம், 5ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீடித்தது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டோா் மீது அனுமதியின்றி பொது இடத்தில் போராட்டம் நடத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதற்காகவும் ஈரோடு நகர போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.