ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பொதுத் தோ்வு நடைபெறும் 87 பள்ளிகளில் மாணவ, மாணவியருக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் 2ஆம் தேதி தொடங்குகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, சத்தி, பவானி, பெருந்துறை என 5 கல்வி மாவட்டங்களிலும் 11ஆம் வகுப்புத் தோ்வை 24 ஆயிரத்து 337 மாணவ, மாணவியா் எழுதுகின்றனா். 12ஆம் வகுப்புத் தோ்வை 24 ஆயிரத்து 142 போ் எழுதுகின்றனா்.
இத்தோ்வுகளுக்காக 87 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து வகையான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இம்மையங்களில் குடிநீா் வசதி, கழிப்பறை, தடையற்ற மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், எளிதான போக்குவரத்து வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் மையங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முறையாக உள்ளது குறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.