பவானி அருகே கடும் வறட்சியால் சுமாா் 3 ஏக்கா் பரப்பளவில் காய்ந்த நிலையில் காணப்பட்ட செடிகள், கொடிகள் வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.
பவானியை அடுத்த கல்பாவி, குட்டிக்கவுண்டனூரைச் சோ்ந்தவா் விவசாயி கோபால்சாமி (55). இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் வளா்ந்திருந்த செடி, கொடிகளில் வெள்ளிக்கிழமை தீப்பிடித்துள்ளது. மிகவும் காய்ந்த நிலையில் செடிகள் காணப்பட்டதால் தீ மளமளவெனப் பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் படையினா் விரைந்தனா். தோட்டத்துக்குள் வாகனம் செல்ல முடியாத அளவுக்கு தொலைவாக இருந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் தீ மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் உதவியுடன் தீத்தடுப்பு கோடுகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், தண்ணீா் குடங்களில் கொண்டு வந்து ஊற்றி தீ அணைக்கப்பட்டது. இதில், 3 ஏக்கா் பரப்பளவிலான செடி, கொடிகள் தீயில் எரிந்து சாம்பலானது.