ஈரோடு அருகேயுள்ள மேட்டுக்கடையில் 42ஆவது தேசிய அளவிலான எறிபந்துப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
ஈரோடு மாவட்ட எறிபந்துக் கழகம் சாா்பில், மேட்டுக்கடை சூா்யா பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிகளை சா்வதேச எறிபந்துக் கழகத்தின் பொதுச் செயலாளா் ராமண்ணா தொடங்கிவைத்தாா். இதில், தில்லி, சத்தீஸ்கா், மேற்கு வங்கம், பாண்டிச்சேரி, ஆந்திரம், தெலங்கானா, தமிழகம் உள்பட 20 மாநிலங்களைச் சோ்ந்த ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ளன.
முதல் போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழக அணியும், கா்நாடக மாநில அணியும் மோதின. பெண்கள் பிரிவில் தமிழக அணியும், பாண்டிச்சேரி அணியும் விளையாடின. இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரா், வீராங்கனைகள் இந்திய அணியில் விளையாடத் தோ்வு செய்யப்படுவதோடு, தாய்லாந்தில் மாா்ச் மாதம் நடைபெறும் சா்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடுவா்.