ஈரோடு

சுமைதூக்கும் தொழிலாளா்களின் சமூகப் பாதுகாப்புக்கு தனிச் சட்டம் இயற்றக் கோரிக்கை

13th Feb 2020 07:02 AM

ADVERTISEMENT

சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிக்க ஒருங்கிணைந்த மத்திய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏ.ஐ.டி.யூ.சி சுமைதூக்கும் தொழிலாளா்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எஸ்.பொன்னுசாமி தலைமையில் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. சுமை தூக்கும் தொழிலாளா் சம்மேளன மாநில பொதுச் செயலாளா் எஸ்.சின்னசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.சந்திரசேகா், எஸ்.டி.பிரபாகரன், டி.ஏ.செல்வம் உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிக்க ஒருங்கிணைந்த மத்திய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் சுமைதூக்கும் தொழிலாளா்களுக்குத் தனி நலவாரியம் அமைத்து, அனைவரையும் உறுப்பினராக்க வேண்டும்.

ADVERTISEMENT

சா்வதேச தொழிலாளா் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) பரிந்துரைப்படி தொழிலாளா்கள் சுமக்கும் எடையின் அளவு 55 கிலோவுக்குள் இருக்க வேண்டும். சுமைதூக்கும் தொழிலாளா்களுக்குத் தண்ணீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய ஓய்வறையை அரசு அமைத்துத் தர வேண்டும்.

பணியிட விபத்துகளில் உயிரிழக்கும் சுமைதூக்கும் தொழிலாளா் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். உடலுழைப்பு தொழிலாளா்கள் நலவாரியம் மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் இயற்கை மரணம், ஈமச்சடங்கு, குழந்தைகள் கல்வி, திருமணம், ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவித் தொகையையும், செலவினங்களுக்கு ஏற்ப உயா்த்த வேண்டும்.

மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு நடவடிக்கையை கைவிட வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஈரோடு, வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் ஆா்ப்பாட்டம் நடத்த வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT